PUBLISHED ON : மே 04, 2026 01:31 AM

வெ.நாராயணன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு முழுதும்
காட்டுத்தீயாய் பரவி வரும், 'டிஜிட்டல் கைது' மோசடிகளைத் தடுக்க, 9,400
வாட்ஸாப் கணக்குகளை முடக்கியிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பயோமெட்ரிக் சரிபார்ப்பு, சிம் கார்டு
கட்டுப்பாடு என, பல அதிரடி நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், நன்கு படித்தவர்கள் முதல், சாதாரண மக்கள் வரை ஆயிரக்கணக்கானோர்
தங்கள் வாழ்நாள் சேமிப்பை இந்த மோசடி பேர்வழிகளிடம் இழந்து நிர்க்கதியாக
நிற்கும் வரை, நம் உளவுத் துறையும், தொலைத்தொடர்புத் துறையும் என்ன செய்து
கொண்டிருந்தன என்ற கேள்வி எழுகிறது.
போலியான வீடியோ அழைப்புகளின்
வாயிலாக மக்களை வீட்டிற்குள்ளேயே, 'டிஜிட்டல் சிறையில்' வைத்து மிரட்டும்
போது, அந்தப் போலி கணக்குகளை ஆரம்பத்திலேயே கண்டறிய நம் தொலைத் தொடர்பு
துறையால் முடியவில்லையா?
தற்போது, போலி சிம் கார்டுகளைக் கண்டறிய
மூன்று மணி நேரக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதேபோல்
சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்
அதிகாரத்தை வங்கிகளுக்கு வழங்க, 45 நாட்கள் ஆகுமாம்.
வங்கித்
துறையில் பல ஆண்டுகள் பணியாற்றியவன் என்ற முறையில், ஒரு கணக்கை
தற்காலிகமாக முடக்குவதற்கு தொழில்நுட்ப ரீதியாக இவ்வளவு காலம் தேவையில்லை
என்பதே என் எண்ணம்.
தற்போது, 9,400 கணக்குகளை முடக்கியது பெரிய
சாதனையல்ல; ஒரு கணக்கு முடக்கப்பட்டால் அடுத்த நிமிடமே, 10 புதிய கணக்குகளை
துவங்கும் அளவிற்கு மோசடிக்காரர்கள் கில்லாடிகளாக இருக்கும்போது, நம்
தடுப்பு நடவடிக்கைகள் மட்டும் எப்போதும் பின்தங்கியே இருப்பது ஏன்?
'சிம் கார்டு' இருந்தால் மட்டுமே வாட்ஸாப் இயங்கும்' என்ற அடிப்படைப்
பாதுகாப்பை அமல்படுத்த இத்தனை ஆண்டுகள் அரசுக்கு தேவைப்பட்டதா?
இனிமேலாவது, தொழில்நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தி, மக்களின் உழைப்பை
இந்த டிஜிட்டல் கொள்ளையர்களிடம் இருந்து அரசு காக்க வேண்டும்.
இழந்த பின் தேடுவதை விட, வரும் முன் காப்பதே சிறந்தது!
முன்னேர் சென்ற வழியில்...
கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பத்திரிகையாளர் என்ற போர்வையில், தி.மு.க.,விற்கு முட்டுக் கொடுக்கும் சிலர், 'ஐ.டி., ஊழியர்கள் தங்கள் தட்டில் உள்ள உணவை சாப்பிடுவதற்கு காரணமே தி.மு.க., அரசு தான் என்பதை மறந்து, தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு ஓட்டளித்து விட்டனர்' என்று பேசி வருகின்றனர்.
இதேபோன்று தான், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, 'முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்., அதிகாரியாக ஆனதற்கும், அடித்தட்டு மக்கள் நீதிபதியாக இருப்பதற்கும் தி.மு.க., தான் காரணம்' என்றார்.
இப்போது அதே பாணியில், பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் சில உடன்பிறப்புகளும் பேச ஆரம்பித்து விட்டனர்.
பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால், பூலோகம் இருண்டு விட்டதாக நினைத்து கொள்ளுமாம். அதேபோல், தி.மு.க., என்ற கட்சி இல்லாவிட்டால், தமிழ்நாடு என்று ஒன்றே இந்தியாவில் இருக்க வாய்ப்பில்லை என்பது போல் இவர்கள் பேசுகின்றனர்.
அதேநேரம், பாக்கெட் சாராயம் யாரால் வந்தது என்ற கதையை பேசினால் தங்கள் சாயம் வெளுத்து விடும் என்பதால், வசதியாக அதை மறைக்கின்றனர். தி.மு.க., அரசு கொண்டு வந்த தமிழ்நாடு லாட்டரி சீட்டால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்ததையும், ஐந்து ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் கதையையும் பேசுவதில்லை.
கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போன்ற போதை பொருள் விற்பனையை பள்ளி மாணவர்கள் முதல் கல்லுாரி மாணவர்கள் வரை கொண்டு சேர்த்தது யார் என்பது, சில கல்லுளி மங்கன்களுக்குத் தெரிந்தும், அது குறித்து வாயே திறப்பதில்லை.
அடுத்தவர் உழைப்பிற்கு உரிமை கொண்டாடி, பெருமை பேசுவதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பவர், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின். உடன்பிறப்புகளும் இப்போது, அதை கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர்!
முன்னேர் சென்ற வழியில் பின்னேரும் செல்கிறது!
தி.மு.க., கணக்கு பலிக்குமா?
வா.கிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 50 ஆண்டுகளில், ஒரே நேரத்தில் இரு திராவிட கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில் எவருமே அரசியல் செய்ததில்லை. ஆனால், அந்த வேலையை மிகவும் கனகச்சிதமாக செய்தார், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை.
அவரது, 'என் மண்; என் மக்கள்' யாத்திரையையும் மக்கள் வெகுவாக ஆதரித்தனர். அரசியல் சாராத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களும் அண்ணாமலையின் பின் வரிசைகட்டி நின்றனர். அதன் எதிரொலியாக, 2024 பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ., 12 சதவீதம் ஓட்டு பெற்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுத்தது.
இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ., என்று பேச வைத்தார், அண்ணாமலை. அவருக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவை கண்டு விழித்துக்கொண்டார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி.
சரியாக காய்களை நகர்த்தினார்; யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல், மத்திய பா.ஜ.,வும் ஏமாந்தது; பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்டது.
திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ஜ., என்று நம்பி இருந்த மக்கள் ஏமாந்தனர். அச்சமயத்தில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் நடக்கவே, அவரது நட்சத்திர அந்தஸ்தும், ரசிக பட்டாளமும் சேர்ந்து, திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ஜ., என்று இருந்த நிலை மாறி, தமிழக வெற்றிக் கழகம் என்றாகி விட்டது.
தி.மு.க., ஆதரவு ஊடகங்களும், 2021 தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்தது போல், விஜயின் த.வெ.க.,வும் எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து, தம்மை வெற்றியடைய செய்துவிடும் என்று கணக்கு போட்டு, அவரது கூட்டங்களுக்கு தடை விதிப்பது போல் நடித்து, பெரிய அளவில் விளம்பரம் கொடுத்தது.
அதேபோன்று, விஜய் தி.மு.க.,வை விமர்சித்தாலும், விஜயை தி.மு.க., விமர்சிக்கவில்லை; மாறாக, முழு நேரமும் பழனிசாமியை விமர்சித்தது.
இதோ இன்று தேர்தல் முடிவுகள் வெளிவரப் போகின்றன... அண்ணாமலையை மாற்றியதால் பா.ஜ., அடைந்த நன்மை என்ன என்பதும், தி.மு.க., போட்ட தேர்தல் கணக்கு பலன் கொடுத்துள்ளதா என்பதும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும்!

