PUBLISHED ON : ஏப் 20, 2026 01:35 AM

ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனநாயக ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் பல, இன்று குடும்ப கட்சிகளாக காட்சியளிக்கின்றன.
இதற்கு, முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்ட கட்சியே காங்கிரஸ் தான்!
முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி மறைவுக்குப் பின், பிரமராக பொறுப்பேற்ற இந்திரா, காங்., தலைவர்களுடனான மோதலில், 1969ல் கட்சியை பிளவுபடுத்தி, அதை, தன் குடும்ப சொத்தாக மாற்றினார்.
இதேபோன்று தமிழகத்திலும் ஓர் அதிகார கைப்பற்றல் அரங்கேறியது.
கடந்த 1967-ல் அண்ணாதுரை தலைமையின் கீழ் தி.மு.க., அரசு அமைந்த போது, நெடுஞ்செழியன் தான், அண்ணாதுரைக்கு அடுத்த நிலையில் இருந்தார். கருணாநிதி மூன்று, நான்காம் வரிசை தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
இந்நிலையில், 1969-ல் அண்ணாதுரை மறைந்தபோது, நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பு ஏற்றார். ஆனாலும், கருணாநிதி மிக சாதுர்யமாக காய் நகர்த்தி, மாவட்டச் செயலர்களை கைக்குள் போட்டு, எம்.ஜி.ஆரின் தயவில், நெடுஞ்செழியனை பின்னுக்குத் தள்ளி முதல்வர் நாற்காலியை கைப்பற்றினார்.
அதன்பின், கட்சிக்குள் வேறு அதிகார மையங்கள் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக, கே.ஏ.மதியழகன், நாஞ்சில் மனோகரன் போன்ற மூத்த தலைவர்களை திட்டமிட்டே ஓரங்கட்டினார்; தனக்கு சவாலாக வரக்கூடிய எந்தவொரு தலைவரையும் உடன் வைத்துக் கொள்ள விரும்பவில்லை கருணாநிதி.
எம்.ஜி.ஆரின் அசுரத்தனமான மக்கள் செல்வாக்கு, அவர் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்த நிலையில், 1972ல் கட்சியின் நிதிநிலை குறித்து எம்.ஜி.ஆர்., கணக்கு கேட்கவே, அதையே காரணமாக வைத்து, எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்கினார்.
இப்படி கட்சியை தன் கட்டுக்குள் கொண்டு வந்த கருணாநிதி, அதை அப் படியே தன் வாரிசுக்கு கடத்த நினைத்தார்.
அதன் விளைவு தான், ம.தி.மு.க., தலைவர் வைகோ மீதான கொலை பழி குற்றச்சாட்டு!
தி.மு.க.,வின் அனல் பறக்கும் பேச்சாளராக வலம் வந்த வைகோவின் வளர்ச்சி, ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என எண்ணிய கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து, தன்னைக் கொலை செய்ய வைகோ சதி செய்ததாக கூறி, 1993ல் அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.
இப்படி ஸ்டாலினுக்கான அரசியல் பாதையை மிக கவனமாக வடிவமைத்தார், கருணாநிதி.
மூத்த தலைவர்கள் பலர் இருக்க, 1996-ல் சென்னை மேயராக ஆக்கப்பட்ட ஸ்டாலின், 2006-ல் அமைச்சராகவும், 2009-ல் துணை முதல்வராகவும் ஆனார்.
கருணாநிதி மறைவிற்கு பின், அப்படியே கட்சி தலைவராக முடிசூட்டிக் கொண்டார், ஸ்டாலின். 'தி.மு.க., சங்கர மடம் அல்ல' என்று கூறியபடி, ஸ்டாலினுக்கான இருக்கையை கருணாநிதி எப்படி தயார்படுத்தினாரோ, அதுபோன்றே ஸ்டாலினும், 'என் குடும்பத்திலிருந்து எவரும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமாட்டார்கள்' என்று கூறிக்கொண்டே, உதயநிதியை அரசியல் களத்தில் இறக்கி, இன்று துணை முதல்வராக ஆக்கி, கட்சியின் அடுத்த வாரிசு அவர் தான் என்பதை உறுதிப்படுத்தி விட்டார்.
இந்திரா துவக்கி வைத்த, 'வாரிசு அரசியல்' எனும் புள்ளியில், அழுத்தமாக கோலம் போட்டது கருணாநிதி குடும்பம்.
இவர்கள் புண்ணியத்தில் இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில், வாரிசு அரசியல்கள் கொடிகட்டி பறக்கின்றன.
அவ்வகையில், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தவர்களில் காங்., - தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கி என்றால் மிகையில்லை!
ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்!
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இதுவரை நடந்த எந்த தேர்தலும் அதிகபட்சமாக, 80 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவானது இல்லை. காரணம், 'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன' என்ற மனநிலையில் இருப்போரும், ஆண்ட கட்சி, ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் இருப்போரும் ஓட்டுப்போட செல்வதில்லை.
இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த மூன்று மாநில சட்டசபைத் தேர்தல்களில், அசாமில் 85 சதவீதம், கேரளா -- 78 மற்றும் புதுச்சேரியில், 91.23 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
அதிலும், புதுச்சேரியில் ஓட்டுப் பதிவு உச்சம் தொட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப் படுகின்றன.
ஓட்டுக்கு பணம் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களுடன், தேர்தல் முடிந்ததும் தங்கக் காசுகள், 'மிக்ஸி, பிரிஜ்' தருவோம் என்று கூப்பன்கள் கொடுக்கப்பட்டதாகவும், அதனாலேயே ஓட்டுப்பதிவு கூடியுள்ளது என்கின்றனர்.
அதேநேரம், நடிகர் விஜயின் அரசியல் வரவால், முதல் முறை ஓட்டு போடும் இளம் வாக்காளர்களும் ஒரு முக்கிய காரணம்.
மேலும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையால், புதுச்சேரியில், 1,03,467 ஓட்டுகள் நீக்கப்பட்டிருப்பதால், கள்ள ஓட்டுகள் பெரும்பாலும் தடுக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணம்.
ஒவ்வொருவரின் ஓட்டும், மாநிலத்தின் தலையெழுத்தையே மாற்றக் கூடியது என்பதை நினைவில் கொண்டு, புதுச் சேரியை போன்று தமிழகத்திலும் அனைவரும் ஓட்டு போட்டு தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்!
சாத்தான் வேதம் ஓதலாமா?
எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நடிகர்கள் பின்னால் இளைஞர்கள் செல்லக்கூடாது; போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது' என்று அறிவுரை கூறியுள்ளார், நடிகர் ரஜினிகாந்த்.
ரசிகர்கள், 1,000 - 2,000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, தன், 'கட்- - அவுட்'டுக்குப் பாலபிஷேகம் செய்வது என அறியாமையில் மூழ்கியிருந்த போதெல்லாம் அறிவுரை சொல்லாத ரஜினிகாந்த், இப்போது திடீர் என்று அறிவுரை கூறக் காரணம் என்ன?
சில ஆண்டுகளுக்கு முன், நடிகரான தன் பின்னால் லட்சக்கணக்கான ரசிகர்கள் வருவர் என்ற நம்பிக்கையில் தானே, கட்சி துவங்கப் போவதாக ரஜினி அறிவித்தார். இளைஞர்கள் மீதான இந்த கரிசனம் அன்று எங்கே போயிற்று?
'தமிழகத்தில், 'சிஸ்டம்' கெட்டுப்போய்விட்டது; அதை, இப்போது சரிசெய்யவில்லை என்றால், எப்போதுமே சரி செய்ய முடியாது' என்றவர், தமிழகத்தில் தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்பது புரிந்ததும், உடல்நிலையைக் காரணம் காட்டி தந்திரமாக ஒதுங்கிவிட்டார்.
இப்போது, நடிகர் விஜயின் அரசியல் கூட்டத்திற்கு கூடும் கூட்டத்தை பார்த்ததும், தமிழக இளைஞர்கள் மீது அக்கறை வந்து விட்டது.
ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு, 'என் பின்னால் யாரும் வரவேண்டாம்; 1,000 - 2,000 ரூபாய் செலவழித்து டிக்கெட் எடுத்து, பணத்தை விரயம் செய்ய வேண்டாம்' என்று கூறியிருந்தால், அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம்; அதைவிடுத்து, நடிகர்களின் பின் இளைஞர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது!
