தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ அண்ணாமலையை விட்டு விடாதீர்கள் அமித் ஷா!

 அண்ணாமலையை விட்டு விடாதீர்கள் அமித் ஷா!

 அண்ணாமலையை விட்டு விடாதீர்கள் அமித் ஷா!

10


PUBLISHED ON : ஜூன் 05, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2026 12:14 AM

10


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின்றன.

பா.ஜ., தலைமை பொறுப்பில் அண்ணாமலை இருந்தபோது, அவர் ஆற்றிய சுறுசுறுப்பான கட்சி பணிகள், தமிழகத்தை தாண்டி, வெளி மாநிலத்தவர்களையும் வியப்புடன் கவனிக்க வைத்தன.

அவரது அசுர வேகத்தை, சுறுசுறுப்பை, பேச்சாற்றலை டில்லி தலைவர்கள் சரியாக பயன்படுத்தி இருந்தால், இன்று, தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக பா.ஜ., உருவெடுத்திருக்கும்; உதிரி கட்சிகள் பல காணாமல் போயிருக்கும்; ஏன்... தமிழக வெற்றிக் கழகமே உருவாகி இருக்காது.

அதுமட்டுமல்ல... நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு சவால் விடும் அளவுக்கு மாபெரும் மாற்று கட்சியாக உருவெடுத்து இருக்கும்; சட்டசபையிலும், பா.ஜ.,வின் பங்கு கணிசமாக உயர்ந்திருக்கும்.

மற்ற மாநிலங்களில் துணிச்சலாக முடிவெடுத்து, வெற்றி கண்ட பா.ஜ., டில்லி தலைமை, அதை, அண்ணாமலை வாயிலாக தமிழகத்தில் செயல்படுத்த தவறி விட்டது.

அண்ணாமலையின் வளர்ச்சியை பொறுக்க முடியாத கூட்டம் ஒன்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாயிலாக காய் நகர்த்தி, அவரை கட்சியில் இருந்து அப்புறப்படுத்தின.

விளைவு... உலகம் உருண்டை என்பது போல், ஆரம்பித்த இடத்திற்கு வந்து விட்டது, பா.ஜ.,வின் ஓட்டு வங்கி!

களத்தில் இறங்கி பணியாற்றாமல், கட்சி அலுவலகத்திற்குள் அமர்ந்து அறிக்கை அரசியல் செய்பவர்களின் பேச்சை கேட்டு முடிவெடுத்த டில்லி தலைமை, இப்போது, அண்ணாமலை போன்ற துடிப்புள்ள நபர் வெளியேற காரணமாகி விட்டது.

இது, தமிழக பா.ஜ.,விற்கு மிகப் பெரிய நஷ்டம்!

இனியாவது, பா.ஜ., டில்லி தலைமை, தமிழகத்தில் அண்ணாமலையையே மீண்டும் தலைவராக்கி, கட்சியை வளர்க்க முடிவெடுக்க வேண்டும்!

கனிமவள கொள்ளையை தடுப்பாரா விஜய்?


சி.ராதாசந்த், ஸ்ரீபெரும் புதுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் கனிமவள கொள்ளை என்பது இன்று நேற்றல்ல; 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருவது தான்!

இதற்கு, 'லாடம்' கட்டுபவரை தான், மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் ஜெயலலிதா; அதேபோல், கனிம வளக் கொள்ளைக்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அவ்வாறு செய்தார் என்றால், அரசுக்கு பெரும் வருமானம் கிடைக்கும்; அதை வைத்து, தேர்தல் அறிக்கையில், தான் அறிவித்த திட்டங்களை அவரால் எளிதாகவே செயல் படுத்த முடியும்.

அதேநேரம், கனிமவள கொள்ளையில் சகல கட்சியினரும் ஈடுபடுவதால், இது அவருக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

ஏனெனில், கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு, இந்த கனிமவளக் கொள்ளையர்கள் தான் படி அளக்கின்றனர். இது பொன் முட்டை இடும் வாத்து என்பதால், அவ்வளவு சீக்கிரம் இதை அரசுடைமை ஆக்க விடமாட்டார்கள், அரசியல்வாதிகள்.

ஒருவேளை, த.வெ.க., அரசு, குவாரிகளை அரசுடைமையாக்கினால், கட்டுமான துறையினருக்கும், சாமானிய மக்களுக்கும் வீடு கட்டுவதற்கான செலவுகள், பல லட்ச ரூபாய் குறையும்!

மேலும், அரசு இதை நடத்தினால், நிர்ணயிக்கப்பட்ட அளவில் மட்டுமே வெட்டி எடுப்பர். இதனால், சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படாது; வெட்டி எடுக்கப்பட்ட பள்ளங்களையும், சிறிய நீர் தேக்கங்களாக மாற்றலாம்; கனிமவள கொள்ளையால் நடைபெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாது.

குறைந்த சதுரடிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு, 'அம்மா சிமென்ட்' வந்ததை போல், குறைந்த சதுரடிகளில் கட்டப்படும் விளிம்பு நிலை மக்களின் வீடுகளுக்கு, சலுகை விலையில் ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றை வழங்க முடியும்.

அரசு திட்டங்களுக்கும், அரசு குவாரிகளில் இருந்தே சப்ளை செய்யப்படும்போது, அது தரமானதாக இருக்கும். அதனால் கட்டப்படும் பாலங்கள், சாலைகள், அணைகள் ஆகியவற்றின் ஆயுள் காலமும் உறுதி செய்யப்படும் .

எனவே, தமிழக முதல்வர் உடனடியாக கனிம வள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இன்றே அதை அரசுடமையாக்கி, கனிமவள மாபியாக்களுக்கு மணி கட்ட வேண்டும்!

அதிகாரிகளின் அலட்சியம்!


கோ. பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனிப் பிரிவில் புகார் கொடுக்க வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய நடை முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதாம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், முதல்வர் தனிப் பிரிவில் மனு அளிக்க பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பர். அதன்பின், பழனிசாமி ஆட்சி காலத்தில், 'ஆன்லைன்' வாயிலாக மனுக்கள் பெறப்பட்டன.

தி.மு.க., ஆட்சியிலோ, 'உங்களுடன் ஸ்டாலின், முதல்வரின் முகவரித் துறை' வாயிலாக மனுக்கள் பெறப்பட்டன.

தற்போது விஜய் ஆட்சியில், புகார் மனுக்களை தலைமை செயலகத்தின் நுழைவு வாயிலில் வைத்திருக்கும் பெட்டியில் போட்டு விட்டு செல்லலாம்; அம்மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., - அ.தி.மு.க., என அனைத்து முதல்வர்களின் ஆட்சி காலத்திலும், நான் பல முறை மனுக்கள் அளித்திருக்கிறேன். மனுக்களை பெறும் நடைமுறை தான் ஆட்சிக்கு ஆட்சி மாறுகிறதே தவிர, நடவடிக்கை என்னவோ ஜீரோ தான்!

மனுக்களை முறையாக விசாரித்து, தீர்வு காண்பதை தவிர்த்து, அவற்றை விரைவில் முடித்து வைத்து, தலைமைச் செயலகத்திற்கு அறிக்கை அளிப்பதிலேயே குறியாக இரு க்கின்றனர், அதிகாரிகள்.

இந்த மாதத்தில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டன, எத்தனை மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்ற புள்ளி விபரங்களை தயாரிக்கும், புள்ளி விபர புலிகளாக தான் அரசு அலுவலர்கள் செயல்படுகின்றனரே தவிர, நியாயமான முறையில் விசாரணை நடத்துவதில்லை.

இதனால், நீதிமன்றங்கள், மாநில தகவல் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம் போன்ற அமைப்புகளை, மக்கள் நாடுகின்றனர்.

மேலும், அரசு அலுவலர்கள் மீது புகார்கள் தெரிவித்தால், அந்த அலுவலரை காப்பாற்ற தான் மற்ற அரசு அதிகாரிகள் முயற்சிக்கின்றனரே தவிர, பொது மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை.

இதனால், அரசு அதிகாரிகள் மீதும், அவர்களை சரியாக வேலை வாங்காத ஆட்சியாளர்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.

இந்த குறைபாடுகள் தற்போதைய ஆட்சியிலாவது களையப்பட வேண்டும்; அப்போது தான் அது உண்மையான மாற்றத்திற்கான அரசியலாக இருக்கும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us