/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

ஒரே வீட்டில் பள்ளி செல்லும் 9 பிள்ளைகள்; கேரளா கண்ணுாரில் கண்கொள்ளா காட்சி

/

ஒரே வீட்டில் பள்ளி செல்லும் 9 பிள்ளைகள்; கேரளா கண்ணுாரில் கண்கொள்ளா காட்சி

ஒரே வீட்டில் பள்ளி செல்லும் 9 பிள்ளைகள்; கேரளா கண்ணுாரில் கண்கொள்ளா காட்சி

ஒரே வீட்டில் பள்ளி செல்லும் 9 பிள்ளைகள்; கேரளா கண்ணுாரில் கண்கொள்ளா காட்சி


UPDATED : ஜூன் 04, 2025 07:10 AM

ADDED : ஜூன் 04, 2025 12:59 AM

Google News

UPDATED : ஜூன் 04, 2025 07:10 AM ADDED : ஜூன் 04, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:நம் நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தன. இதன் ஒரு கட்டமாக, பொது இடங்களில், 'நாம் இருவர்; நமக்கு ஒருவர்' என, குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும் என்று, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

அந்த ஒரு குழந்தையை வளர்க்கவும், பள்ளிக்கு அனுப்பி ஆளாக்கவுமே, இந்த காலத்து பெற்றோர் படாதபாடுபடுகின்றனர்.

அதற்கேற்ப தற்போதைய கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணம், ஒரு குழந்தையை படிக்க வைப்பதற்கே பெற்றோரின் விழிகளை பிதுங்க வைக்கின்றன.

அங்கன்வாடி


நிலைமை இப்படி இருக்க, கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டத்தில், ஒரு தம்பதி 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். அதில், ஒன்பது குழந்தைகள் அங்கன்வாடி துவங்கி ஹையர் செகண்டரி வரை பள்ளிக்கு வரிசைகட்டி செல்வது, அப்பகுதியில் கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

கண்ணுார், கோடூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 44; தொழிலதிபரான இவர், பல்வேறு முன்னணி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரம்யா, 37. இந்த தம்பதிக்கு தான் 10 குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகளில், எட்டு பேர் பெண்கள்; இரண்டு ஆண்கள். முதல் குழந்தை வயது 17. கடைசி குழந்தையின் வயது மூன்று மாதம்.

முதல் மூன்று மகள்களான அல்பியா, ஆக்னஸ் மரியா, ஆன் கிளேர் ஆகியோர் முறையே 12, 10, 8ம் வகுப்புகளில் ஒரே பள்ளியில் படிக்கின்றனர்.

அடுத்த நான்கு குழந்தைகளான அசின் தெரேஸ், லியோ டாம், லெவின்ஸ் அந்தோணி, கேத்தரின் ஜோகிமா தலகாணி ஆகியோர் முறையே 6, 4, 2 மற்றும் எல்.கே.ஜி., வகுப்புகளில் படிக்கின்றனர்.

இரட்டையர்களான 8, 9வது குழந்தைகள் ஜியோ வானா மரியா, கியானாஜோசப்பினா அங்கன்வாடி பள்ளிக்கு செல்கின்றனர்.

இப்படி, சந்தோஷ் --- ரம்யா தம்பதியின் ஒன்பது குழந்தைகள் பிளஸ் 2 முதல் அங்கன்வாடி வரை படிக்கின்றனர். 10-வது குழந்தையான அன்னா ரோஸ்லியா மூன்று மாத குழந்தை.

ரம்யா குடும்ப தலைவியாக உள்ளார். குழந்தைகளை கவனிப்பதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சிதா என்ற பெண் பணியாளர் உள்ளார். அவர்கள் பாட்டியும் குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார்.

'சிசேரியன்'


தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியுள்ள நிலையில், ஒன்பது பேரும் வரிசையாக பள்ளிக்கு செல்வதை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

இதற்காக, சந்தோஷ் வீட்டு சமையலறை அதிகாலை, 5:00 மணிக்கு செயல்பட துவங்குகிறது.

குழந்தைகள் அவரவர் பணிகளை, அவரவரே கவனித்துக் கொள்கின்றனர். இதற்கு பயிற்சி அளித்துள்ளனர். காலை 8:30 மணி முதல் பள்ளி வாகனங்கள் ஒவ்வொன்றாக வந்து குழந்தைகளை ஏற்றி செல்கின்றன.

ரம்யாவுக்கு, முதல் மூன்று பிரசவங்கள் இயற்கையாக நடந்துள்ளன. அதன்பின் குழந்தைகள் பிறக்க சிசேரியன் செய்ய வேண்டி வந்துள்ளது.

சிலர், 'உங்களுக்கு இத்தனை பிள்ளைகளா?' என, கேள்வி எழுப்பும்போது, 'கடவுளின் பரிசுகளை நிராகரிப்பது பாவம்; எங்கள் பிள்ளைகள் வளர, வளர எங்கள் தொழிலும், வியாபாரமும் வளர்ந்தது' என்று ரம்யா சிரித்தபடி கூறுகிறார், என்கின்றனர் அக்கம்பக்கத்தினர்.