PUBLISHED ON : ஏப் 18, 2026 12:00 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை: விஜய் கட்சியில் கட்டமைப்பு இல்லை. அவர் செல்லும் இடங்களில் வரும் கூட்டம் ஓட்டுகளாக மாற வாய்ப்பில்லை. விஜய்க்கு முதல் தலைமுறை ஓட்டுகள் தான் உள்ளன. அவர்கள் ஓட்டளிக்க வருவரா என்பதே தெரியவில்லை. அவர்கள், தேர்தல் நாளன்று பிக்னிக் சென்று விடுவர். விஜய் கட்சியில், அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லை; அங்கு கட்டமைப்பும் இல்லை.
டவுட் தனபாலு: அது சரி... 1994ல் துவங்கிய உங்க கட்சிக்கு, 32 வயசாகுது... தமிழகம் முழுக்க உங்க கட்சிக்கு நல்ல கட்டமைப்பு இருக்குன்னும் சொல்லிக்கிறீங்க... அப்படியிருந்தும், தனி சின்னத்தில் தேர்தலில் நிற்காம, உங்க தாய் கட்சியான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நீங்க, மற்ற கட்சிகளை குறை கூறலாமா என்ற, 'டவுட்' வருதே!
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தை ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க.,வினர், இப்போது, 8,000 ரூபாய் கூப்பனை நம்பி தேர்தலை சந்திப்பது வெட்கக்கேடான விஷயம். தமிழகத்தில், நிறைய மாணவர்கள் படிக்கும் பல பள்ளிகளில், ஒரு ஆசிரியர் தான் இருக்கிறார். ஆனால், 'டாஸ்மாக்' மதுபான கடையில் ஐந்து பேர் பணியாற்றுகின்றனர்.
டவுட் தனபாலு: பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பது, அரசுக்கு கூடுதல் செலவுதானே... ஆனா, 'டாஸ்மாக்'கில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு, 50,000 கோடி ரூபாய்க்கு மேல வருவாய் கொட்டுதே... அதனால, அஞ்சு இல்லை, 10 - 15 ஊழியர்களை கூட நியமித்து, மது விற்பனையை அதிகரிக்கவே பார்ப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
மா.கம்யூ., கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்: இந்த தேர்தலில், நடிகர் விஜய் மீது ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மைதான். இந்த ஈர்ப்பு, ஒரு புதிய அரசியல் கட்சி, களத்திற்கு வரும்போது இயல்பாக இருப்பது தான். அது, தி.மு.க., போன்ற பெரிய கூட்டணியை பாதிக்காது; பிரிந்து கிடக்கும் எதிரணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
டவுட் தனபாலு: விஜய் கட்சிக்கு ஈர்ப்பு இருப்பது உண்மைதான்... ஆனா, ஒரு காலத்தில் நாடு முழுக்க இருந்த உங்க கட்சி, இன்று கேரளாவில் மட்டுமே செயல்படும் மாநில கட்சி மாதிரி சுருங்கிடுச்சே... அது ஏன்னு, உங்க, 'பொலிட் பீரோ' கூட்டங்களில் என்னைக்காவது ஆலோசனை நடத்தியிருக்கீங்களா என்ற, 'டவுட்' வருதே!

