PUBLISHED ON : அக் 21, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: கூட்டணிக்காக, யாரிடத்திலும் சென்று தவம் கிடக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அ.தி. மு .க., வை தேடி, கூட்டணி கட்சிகள் படையெடுக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கான பக்குவப்பட்ட தலைவராக, எல்லாரையும் ஒருங்கிணைக்கக்கூடிய தலை வராக, அ. தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உயர்ந்துள்ளார்.
டவுட் தனபாலு: அது சரி... முதல்ல, சொந்த கட்சியில இருந்து வெளியில் விரட்டப்பட்ட பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்களை முதல்ல பழனிசாமி அரவணைக்கட்டும்... அப்புறமா, கூட்டணி கட்சிகளை அரவணைக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
பத்திரிகை செய்தி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிட, பிரபல ஜோதிடர் ஆலோசனைப்படி, 'வி' என்ற முதல் எழுத்தில் துவங்கும் ஒன்பது சட்டசபை தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து, அக்குவேறு ஆணி வேறாக அலசப்படுகிறது. அத்தொகுதிகளில் பெண்கள், இளைஞர்கள், புதுமுகங்களின் ஓட்டு சதவீதம், கட்சியின் கட்டமைப்பு பலம், விஜய் போட்டியிட்டால், அவரது வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து, 'சர்வே' எடுக்கப் படுகிறது.
டவுட் தனபாலு: அது சரி... ஜோதிடர் பேச்சை கேட்டு தான் தொகுதியை விஜய் முடிவு பண்ண போறாரா... கரூர் பொதுக் கூட்டத்துக்கும் ஜோதிடர்கள் ஆலோசனையை கேட்காம போய் தான், சிக்கல்ல மாட்டிக்கிட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll
ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ: கரூர் மரணங்கள் குறித்து, உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் இறுதி தீர்ப்பு வருவதற்குள், அது குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது. மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு ஓரளவுக்கு பொறுப்பு இருந்தாலும், காவல் துறைக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் பொறுப்பு இருக்கிறது. ஆனால், மக்களுக்கு தான் முழு பொறுப்பு இருக்கிறது. அவர்கள் சரியாக இருந்திருந்தால், கரூர் நெரிசல் சம்பவம் நடந்திருக்காது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சும்மாவா சொல்லியிருக்காங்க... 'நடிகர்களும் நம்மை போல மனித பிறவிகள் தான்... அவங்களை நேர்ல பார்க்காம இருந்துட்டா, குடி எதுவும் முழுகி போயிடாது' என்பதை உணர்ந்திருந்தால், கரூர் துயரத்தை தடுத்திருக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll