PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ர மணியம்: 'தமிழகத்துக்கு கல்வி நிதி தராத மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற உண்ணா விரதம்' என்ற நாடகத்தை, திருவள்ளூர் தொகுதி காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் நடத்தி உள்ளார். தமிழக காங்., தலைவர்கள் கூட இது பற்றி பேசாதபோது, தன்னிச்சையாக சசிகாந்த் செந்தில் போராட்டம் நடத்தியது, தர்மஸ்தலா கோவில் விவகாரத் தில் தன் பெயர் அடிபடுவதை திசை திருப்பவே என்பது அப்பட்டமாக தெரிகிறது.
டவுட் தனபாலு: அதானே... தமிழகத்துக்கு கல்வி நிதியை தராம, மத்திய அரசு ஒன்றரை வருஷமா இழுத்தடிக்குது... அப்ப எல்லாம் சசிகாந்த் செந்தில், 'கப்சிப்'னு தானே இருந்தாரு... அது பற்றி பார்லிமென்டில் கூட பேசிய மாதிரி தெரியலையே... இப்ப, தர்மஸ்தலா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததும் உண்ணா விரதம் இருந்தது ஏகப்பட்ட, 'டவுட்'களை கிளப்புதே!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன். வரும் காலத்தில் யாருடன் கூட்டணி என்பதை, என் தொண்டர்கள் தீர்மானிப்பர். 'நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா?' என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்பதே என் பதில்.
டவுட் தனபாலு: ஒரு சின்ன திருத்தம்... தே.ஜ., கூட்டணியில் இருந்து நீங்களா வெளியேறலை.. . பழனிசாமியை உள்ளே அனுமதிச்சுட்டு, உங்களை அவங்க தான் வெளியேத்திட்டாங்க... அது சரி... வருங்கால கூட்டணியை உங்க தொண்டர்கள் தீர்மானிப்பாங்கன்னு சொல்றீங்களே... அப்படி யாராவது உங்க பின்னாடி இருக்காங்களா என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: மதுரை மாநகராட்சி யில், சொத்து வரி நிர்ணயித்ததில், 200 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரிகள், தற்போது பணிபுரியும் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு நடந்ததற்கு மேயரை கைது செய்திருக்க வேண்டும். மேயரை காப்பாற்ற, அவரது கணவரை கைது செய்து, கண்துடைப்பு நாடகத்தை நடத்தியுள்ளனர்.
டவுட் தனபாலு: மேயரின் கணவரை கைது செய்ததன் வாயிலாக, 'பெண்கள் அங்கம் வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளில், அவங்களது கணவர்கள் தான் நிர்வாகம் செய்றாங்க... கட்டிங், கமிஷன் விவகாரங்களை எல்லாம் அவங்க தான் கையாளுறாங்க' என்பதை அரசே பகிரங்கமா ஒப்புக்கொண்டு விட்டது என்பதில், 'டவுட்'டே இல்லை!