'எண்ட் டூ எண்ட்' மென்பொருள் குளறுபடி; குடிநீர் வாரிய நிதி ஒதுக்கீடு முறை மாற்றம்
'எண்ட் டூ எண்ட்' மென்பொருள் குளறுபடி; குடிநீர் வாரிய நிதி ஒதுக்கீடு முறை மாற்றம்
ADDED : ஜூன் 09, 2026 06:03 AM

சென்னை: குடிநீர் வாரிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை வேகப்படுத்த துவங்கிய, 'எண்ட் டூ எண்ட்' மென்பொருள் குளறுபடி நீங்கும் வரை, பணிகளுக்கான தொகையை காசோலையாக வழங்கலாம் என, அதிகாரிகளுக்கு, சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தில், சுத்திகரிப்பு நிலையங்களுக்கான மின் கட்டணம் முதல் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு வரை, இளநிலை பொறியாளர் முதல் மேலாண்மை இயக்குநர் வரை கையெழுத்து பெற்று, அந்தந்த துறைக்கு காசோலையாக வழங்கப்படும்.
இதில் ஏற்படும் காலதாமதத்தால், பணிகள் தொய்வு, அபராதம் செலுத்தும் நிலை போன்ற பல பிரச்னைகள் ஏற்பட்டன.
இதனால், ஆன்லைன் வழியாக நேரடியாக, அந்தந்த துறைகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகளில், நேரடியாக பணம் சேரும் வகையில், 'எண்ட் டூ எண்ட்' என்ற மென்பொருள், ஏப்., மாதம் உருவாக்கப்பட்டது.
இதில் ஏற்பட்ட குளறு படி காரணமாக, ஏப்., மே மாதங்களை அந்தந்த துறைகளுக்கு பணம் வழங்குவதில், காலதாமதம் ஏற்பட்டதால் லாரி குடிநீர் வினியோகம், திட்ட பணிகள் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன.
இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, மேலாண்மை இயக்குநர் ஆனந்த், சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளிடம் மென்பொருள் குறித்து விசாரித்துள்ளார். தொடர்ந்து, பணிகள் பாதிக்காத வகையில், அந்தந்த துறைகள், ஒப்பந்த நிறுவனங்களுக்கு நிதி வழங்க உரிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
துறைகளுக்கான கட்டணம், ஒப்பந்த நிறுவனங்களுக்கான நிதியை, காசோலையாகவும் மற்றும் எண்ட் டூ எண்ட் மென்பொருள் வழியாகவும் அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மென்பொருளில் குளறுபடி ஏற்பட்டால், பழைய வழிமுறையில் உரிய நாட்களில் காசோலை சேரும் வகையில் கோப்புகள் அனுப்ப வேண்டும். மென்பொருள் முறையாக செயல்பட்டால் அதுவழியாக, ஒவ்வொரு முறையும் நிதி வழங்கி, காசோலை நடைமுறையை நிறுத்த வேண்டும்.
எண்ட் டூ எண்ட் மென்பொருள் முழுமையான பயன்பாட்டுக்கு வரும் வரை, தேவையின் அடிப்படையில் காசோலை வழங்கும் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
