PUBLISHED ON : மார் 24, 2026 02:55 AM

'இலவசங்களை நம்பி தான் தேர்தலை சந்திக் கிறார்...' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி கூறுகின்றனர், அங்குள்ள எதிர்க்கட்சியான பா.ஜ.,வினர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏப்., 23, 29 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மம்தாவை வீழ்த்த, எதிர்க்கட்சியான, பா.ஜ.,வினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
பா.ஜ., மத்தியில் ஆளுங்கட்சியாக இருப்பதால், சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, தங்களை முடக்கி விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார், மம்தா.
இதையடுத்து, வாக்காளர்களை கவர்வதற்காக முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். 'நாங்கள் மீண்டும் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை, 500ல் இருந்து, 1,500 ரூபாயாக உயர்த்துவோம்.
'வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, மாதந் தோறும், 1,500 ரூபாய் வழங்கப்படும். மருத்துவ வசதிகள் மக்களின் வீட்டு வாசலுக்கே தேடி வரும்...' என்று, பல வாக்குறுதிகளை சமீபத்தில் அறிவித்தார், மம்தா.
பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ, 'மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ், 15 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்து வருகிறது. சாதனைகளை சொல்லி அவர்களால் ஓட்டு கேட்க முடியவில்லை; இலவச வாக்குறுதிகளை அளித்து தான் ஓட்டு கேட்க வேண்டியுள்ளது...' என்று கிண்டல் அடிக்கின்றனர்.
