வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம் என்ன?

வயிறு மற்றும் குடல் தொடர்பான பல பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கங்களே.

அதிக பதப்படுத்தப்பட்ட, கொழுப்பு நிறைந்த உணவுகளை, எந்த நேரத்திலும் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது.

இவை சரியாக செரிமானம் ஆகாமல், குடலில் நீண்ட நேரம் தங்குவதால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகின்றன.

இதனால், குடலில் நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து, குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

தற்போது பல துரித உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகளுடன், 'மயோனெய்ஸ்', சாஸ் தொட்டு சாப்பிட பலரும் விரும்புகின்றனர்.

சில சாஸ்களில் பயன்படுத்தப்படும் 'பாலிசோர்பேட்-80' (Polysorbate-80) என்ற கெமிக்கல், சிறுகுடலின் உள்ளமைப்பை பாதுகாக்கும் மெல்லிய படலத்தை பாதிக்கக்கூடும்.

நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிறு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிகமாக சாப்பிட்டும் உடல் எடை குறைதல், செரிமான கோளாறு, மலச்சிக்கல் ஆகியன் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிக சோர்வு, தொப்புள் சுற்றி வலி ஏற்படுதல், இரவில் எழுந்து மலம் கழிப்பது, மலத்துடன் ரத்தம் கலந்து வெளியேறுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அலட்சியமாக இருக்கக் கூடாது.