பீட்ரூட் வடை... நிறமும் உண்டு சுவையும் உண்டு! ரெசிபி இதோ!

பீட்ரூட்டில் பல விதமான புரதச் சத்துகள் உள்ளன. ரத்தசோகையை தடுக்கும், இதய ஆரோக்கியத்துக்கு நல்லது, ரத்த உற்பத்தியை அதிகரிக்கும், அஜீரணத்தை போக்கும்.

சில வீடுகளில் குட்டீஸ் பீட்ரூட் சாப்பிட மறுப்பர். இதில் சுவையான வடை செய்து தாருங்கள்; கேட்டு வாங்கி சாப்பிடுவர். இதை எப்படி செய்வது என, பார்க்கலாமா?

செய்முறை: முதலில் 100 கி கடலைப்பருப்பை மூன்று, நான்கு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். ஒரு பீட்ரூட்டை துருவி எடுத்து வைக்கவும்.

அதன்பின் கடலைப்பருப்பை தண்ணீர் சேர்க்காமல், மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, துருவிய பீட்ரூட், சிறிதாக நறுக்கிய கொத்துமல்லி, கருவேப்பிலை, இஞ்சி துண்டு, சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பிசையவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டி, எண்ணெயில் போடவும்.

இரண்டு பக்கமும், பொன்னிறமாக சிவந்த பின் எடுக்கவும். பீட்ரூட் வடை ரெடி.

தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டு சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.