இனி தபால் அலுவலகங்களில் பான் எண் கட்டாயம்
தபால் அலுவலகங்களில் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு, 'பான்' எண்ணை குறிப்பிடுவது இனி கட்டாயம் என தபால் துறை அறிவித்துள்ளது.
அதிக மதிப்புள்ள நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதன் வாயிலாக, வரி ஏய்ப்பை தடுக்கவும், கருப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நிதி பரிவர்த்தனைகளை முறைப்படுத்தவும் இது அவசியமாகிறது.
எனவே, வருமான வரி சட்டம் 2026ன் கீழ், ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, தபால் அலுவலக பரிவர்த்தனைகளுக்கு 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயம்.
குறிப்பாக, கணக்கு துவங்குதல், பணம் 'டிபாசிட்' செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பெரிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள 'பான் எண் கட்டாயம்.
ஒருவேளை, டிபாசிட்தாரரிடம் 'பான் எண் இல்லை எனில், அவர் வருமான வரி விதிகள் 2026 அடிப்படையில், படிவம் 97ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
அதில் டிபாசிட்தாரரின் பெயர், முகவரி, தொகை உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்.
படிவத்தையும், ஆவணங்களையும் தபால் அலுவலகங்கள் முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயம்.
'பான் எண் இல்லாதவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த படிவம் 60 நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக படிவம் 97, படிவம் 98 ஆகிய இரண்டு படிவங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.