மெட்ராஸ் ஐ வேகமாக பரவுது! அலட்சியம் கூடாது என எச்சரிக்கை
பருவநிலை மாற்றத்தால், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், 'மெட்ராஸ் ஐ' என்ற கண் நோய் பாதிப்பாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றான, 'என்ட்ரோ, அடினோ' ஆகிய இருவகை வைரஸ் தொற்றால், 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு ஏற்படுகிறது.
கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், ஒட்டிக்கொள்கிறவாறு கண்ணிலிருந்து அழுக்கு வெளியேற்றம் மற்றும் வெளிச்சத்தை பார்க்க கூச்சம் ஆகியவை, 'மெட்ராஸ் ஐ' அறிகுறிகள்.
கண்ணில் கருப்பு நிற படலத்தின், அடுக்கான கருவிழியில் தொற்று இருந்தால், அதனால் மங்கலான பார்வை ஏற்படக்கூடும்.
இந்த தொற்றால், சில நோயாளிகளுக்கு கண் வீக்கம், அழற்சியை ஏற்படுத்தி, குணமடைவதற்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளும்.
இந்நோய் ஏற்பட்டவுடன் உரிய சிகிச்சை பெற வேண்டும். இல்லையென்றால், அதிதீவிரமான பிரச்னையாக மாறக்கூடும்.
பாதிப்பு ஏற்பட்டால், கண்கள் மற்றும் கைகளை அடிக்கடி நல்ல நீரால் கழுவ வேண்டும். கண்களுக்கு போதியளவில் ஓய்வு அளிக்க வேண்டும்.
நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு உட்கொள்ளுதல், உறக்கம் வாயிலாக கண்ணுக்கு ஓய்வு போன்றவற்றால், நோய் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய உதவும்.
மருந்து கடையிலிருந்து, 'ஆன்ட்டிபயாட்டிக்' மருந்துகளை, 'மெட்ராஸ் ஐ' பிரச்னைக்காக வாங்கி பயன்படுத்திவிட்டு, குணமடையாமல் பலர் மருத்துவமனை வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
சுயமாக மருந்து பயன்படுத்துவதையும், 'ஓடிசி' மருந்து என்ற கண் சொட்டு மருந்துகளை தவிர்க்க வேண்டும். கண் டாக்டர்களின் பரிந்துரைப்படி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.