கர்ப்ப கால வாய் ஆரோக்கியம் அறிவோமா?
கர்ப்ப காலத்தில் வாய் ஆரோக்கியம், தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை தருகிறது; ஆனால், ஹார்மோன் மாற்றங்களால், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் ஏற்படக் கூடிய உடல் ரீதியிலான பிரச்னைகள், ஹார்மோன் மாற்றங்களால், ஈறுகளில் வீக்கம், ரத்தக் கசிவு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
புரோஜெஸ்ரோன், ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், ஈறு நோய்களை உண்டாக்க காரணமாக இருக்கின்றன.
கர்ப்ப காலத்தில், கருவின் வளர்ச்சிக்காக, பிளசென்டா எனப்படும் தாய், சேய் இணைப்புத் திசு, சில ஹார்மோன்களை சுரக்கிறது.
இவை, சில சமயங்களில் இன்சுலின் செயலை தடை செய்யும்; ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதால், ஈறுகள் சிவந்து, ஏற்கனவே உள்ள ஈறு நோய், மேலும் மோசமாகலாம்.
ஈறுகள் பாதிப்பால் உருவாகும் கிருமிகள், உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுவதால், குறைபிரசவம் மற்றும் குறைந்த எடையுள்ள குழந்தை பிறக்கும் அபாயமுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சில கர்ப்பிணிகளுக்கு, ஈறுகளில் சிறிய கட்டி போன்று தோன்றும். இதை 'பிரக்னன்சி டியூமர்' என்பர். இது ஒரு சாதாரண வீக்கம் தான். குழந்தை பிறந்த பின்பு, தானாகவே குறைந்து விடும்.