தனிமையை கடந்துசெல்ல கற்றுக் கொள்ளுங்கள்...

தனிமை என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானது அல்ல. ஒவ்வொருவரின் சூழல், வயது, உடல் நலம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை அடிப்படையில் அழகானதாகவும், அபாயமானதாகவும் மாறும்.

உடல் நல பாதிப்பு, வறுமை போன்ற காரணங்கள் மட்டுமின்றி, அனைத்து வசதியும் இருக்கும் முதியோர் பலரும் தனிமையால் பாதிக்கப்படுவதை காண்கிறோம்.

பிள்ளைகள் வெளி நாடுகள், மாநிலம், மாவட்டங்களில் செட்டில் ஆகியிருப்பின், தனி வீடுகளை தவிர்த்து, அபார்ட்மென்ட், முதியோருக்கான பிரத்யேக அபார்ட்மென்ட்களுக்கு குடியேறுவது நல்லது.

பண்டிகை சமயங்களில் நாம் தானே இருக்கிறோம் என்று நினைக்காமல், குடியிருப்பு வாசிகளுடன் இணைந்து கொண்டாட வேண்டும்.

ஓ.டி.டி., இணையதளங்களில் நுாற்றுக்கணக்கான படங்கள் உள்ளன. அவற்றில், பிடித்த பழைய, புதிய படங்களை பார்க்கலாம்.

பகல் பொழுதில் துாக்கத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பலர் பகலில் உறங்குவதால், மனஅழுத்தத்துக்கு ஆளாகலாம். இரவில், 9-10 மணிக்குள் உறங்கச் செல்ல வேண்டியது அவசியம்.

துணையை இழந்து தனிமையில் இருப்பவர்கள், நிலை சற்று சிரமமானது. இதுபோன்ற சூழலில் உள்ளவர்களுக்கு பிள்ளைகள், உறவினர்களின் ஆதரவு, அரவணைப்பு கட்டாயம் தேவை.

வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகளுடன் சென்று, அவர்களுடன் நேரம் செலவிடுவது சகஜ நிலைக்கு திரும்ப உதவும்.

உறவினர்களுடன் சுமூகமான சூழல்களை ஏற்படுத்தி, வாரத்துக்கு ஒரு முறையாவது அழைத்து பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனிமையில் நமக்கான தேடல்கள், பொழுதுபோக்கு வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது சரியான சமயத்தில் கைகொடுக்கும்.