பல் தொடர்பான பிரச்னைகள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்குமா?
பல பெற்றோர் குழந்தைகளின் பல் வலியை ஒரு சிறிய பிரச்னையாகவே கருதுகின்றனர். 'பால் பல்லுதானே, பின் விழுந்துவிடும்' என்ற தவறான எண்ணம், இதற்கு காரணமாகும்.
ஆனால், பல் வலி தொடர்பான பிரச்னைகள் அவர்களின் உணவு பழக்கம், வளர்ச்சி, மனநலம், படிப்பு திறன், எதிர்கால பல் அமைப்பு வரை மறைமுகமாக பெரும் பாதிப்பை தரும்.
பல் வலியுள்ள குழந்தைகள், தினசரி சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து மிக்க, அதே சமயம் பற்களால் கடித்து, மென்று சாப்பிட வேண்டிய, கடினமான உணவுகளை தவிர்ப்பர்.
காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் போன்றவற்றை மென்று சாப்பிட முடியாமல் முழுமையாகத் தவிர்ப்பதால் ஆரோக்கியமான உணவு உண்ணும் அளவு குறைகிறது.
மாறாக, மென்மையான, சர்க்கரை அதிகமுள்ள தவிர்க்க வேண்டிய, உணவுகளையே விரும்புவதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும்.
சரியான ஊட்டச்சத்து கிடைக்காததால் குழந்தைகளின் எடை, உயரம் வயதுக்கேற்ப இருப்பதில்லை. கால்சியம், புரதம், இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படலாம். தொடர்ச்சியான வலி குழந்தைகளின் உடல் நலத்தை மட்டுமின்றி, மன வளர்ச்சியையும் பாதிக்கும்.
பல் வலி காரணமாக குழந்தைகள் சரியாக துாங்க முடியாமல், நினைவாற்றல், கவனம் செலுத்தும் திறன் குறையும்; வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல், படிப்பில் பின்னடைவு ஏற்படுகிறது.
வலி காரணமாக, எரிச்சல், மன அழுத்தம், பயம் உருவாகலாம். சில குழந்தைகள், பல் வலி காரணமாக, பள்ளிக்குச் செல்ல விரும்பாமல், தவிர்க்கவும் துவங்குகின்றனர்.
எனவே, குழந்தைகளின் பல் வரிசை, உணவுப் பொருளை கடிப்பது, தாடை வளர்ச்சி குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான மருத்துவ வழிகாட்டல் பெறுவது அவசியம்.
எதிர்காலத்தில், புதிய பல் கட்டும் அவசியம், தாடை எலும்பு சிகிச்சையை தவிர்க்க உதவும். ஆரம்ப வயதில் அளிக்கும் சரியான கவனம், இயல்பான பல் வளர்ச்சிக்கு உதவும்.