ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் அபாயத்தை அதிகரிக்கும் சிகரெட்

ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் (முடக்குவாதம்) என்பது நாள்பட்ட தன்னுடல் தாக்க நோய். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, மூட்டுகளின் திசுக்களை, வெளிக் காரணி என தவறாக நினைத்து தாக்குகிறது.

இது தொடர்ச்சியான வலி, வீக்கம், கை, கால் விறைப்புத்தன்மை, படிப்படியாக மூட்டு சேதத்தை ஏற்படுத்துகிறது.

இது தொற்று நோய்; கிடையாது. பரவக்கூடியதும் இல்லை; உணவு, குளிர் காலநிலையால் ஏற்படாது. மரபணு ரீதியில் வரலாம். சிகரெட் பழக்கம் இருப்பது, இந்நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

ஆண்களை விட பெண்களிடையே, முடக்குவாதம் அதிகமாகக் காணப்படுகிறது. மூட்டுகளில் வலி, வீக்கம், வெப்பம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

பாதிக்கப்பட்ட மூட்டுகளை நகர்த்துவதில் சிரமம் இருக்கும். காலையில் எழுந்ததும், மூட்டுகளில் விறைப்புத்தன்மை 30 - 60 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்.

ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மிதமாக இருப்பதால், மருத்துவ ஆலோசனை பெறாமல் அலட்சியமாக இருந்து விடுவர்.

முறையாக சிகிச்சை செய்யாவிட்டால், நோயின் தன்மை தீவிரமாகி, மூட்டுகளில் நிரந்தர செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இதன் காரணமாக, நடப்பதற்கும், தினசரி வேலைகளை செய்வதற்கும் கூட முடியாது.

'ருமட்டாய்டு பேக்டர்' எனும் ரத்தப் பரிசோதனை, ஆன்டி சிசிபி பரிசோதனை பாதிக்கப்பட்ட மூட்டுகளின் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து நோயை உறுதி செய்யலாம்.

இதற்கு ஒருங்கிணைந்த சிகிச்சை முறைதான் பலன் தரும். மருந்து, மாத்திரை, பிசியோதெரபி, நோய் குறித்த புரிதல், தேவைப்பட்டால் ஆப்பரேஷன் ஆகியவை இதில் அடங்கும்.