சுற்றுச்சூழல் வெப்பம் அதிகரிப்பதால், கர்ப்பம் தரிப்பதில் சிரமங்கள் உள்ளதா?
கர்ப்பிணியின் உடல் வெப்பம், கருவுக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன.
நம் நாட்டில் கர்ப்பிணிகளிடம் நடத்திய ஆய்வில், அதிக வெப்பமுள்ள இடத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு எதிர்பாராத வகையில் அபார்ஷன் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
ஒரே மாதிரியான உடல் உழைப்பு செய்தாலும், வெப்பம் அதிகமுள்ள இடத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு, குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதும் அதிகமுள்ளது.
வெப்பமயமாவதால் அனைவரும் பாதிக்கப்பட்டாலும், கிராமத்தில் வயல்வெளிகளில் வேலை செய்யும் பெண்கள், நகரங்களில் குடிசை பகுதியில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, கோடை துவங்கும்போது, கவனமாக இருக்க வேண்டும், கம்பங்கூழ், மோர் என்று அதிகம் செலவு இல்லாத உணவுகளை சாப்பிடலாம்.
உடல் சூட்டைக் குறைக்க, ஈரத் துணியால் அவ்வப்போது கழுத்தின் பின் பகுதியைத் துடைக்கலாம்.
அலுவலகம் செல்பவர்கள், ஒப்பனை செய்திருக்கிறோம் என்பதற்காக, முகம் கழுவாமல் இருக்கக் கூடாது. உடல் சூடு குறைவது தான் முக்கியம்.
முடிந்தால் இளநீர் குடிக்கலாம். பாக்கெட்டில் விற்கும் கலர் கலரான குளிர் பானங்கள், குடித்ததும் உடல் சூடு குறைவது போன்ற உணர்வை தரும்.
ஆனால், இவற்றில், பிரக்டோஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
வெயில் நேரங்களில் கர்ப்பிணி பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். காலை, மாலை என வெப்பம் குறைந்த நேரத்தில், சமையல் நேரத்தை மாற்றினாலே, வெப்பம் தாக்காமல் இருக்கலாம்.