/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மேம்பாலத்துக்கு அ.தி.மு.க., செலவிட்டது எவ்வளவு? முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி
/
கோவை மேம்பாலத்துக்கு அ.தி.மு.க., செலவிட்டது எவ்வளவு? முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி
கோவை மேம்பாலத்துக்கு அ.தி.மு.க., செலவிட்டது எவ்வளவு? முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி
கோவை மேம்பாலத்துக்கு அ.தி.மு.க., செலவிட்டது எவ்வளவு? முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி
ADDED : அக் 31, 2025 06:23 AM

கோவை: ''கோவை மேம்பாலத்துக்கு அ.தி.மு.க., ஆட்சியில் செலவிட்டது வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே,'' என, தி.மு.க., மேற்கு மண்டல பொறுப்பாளரான, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கோவையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு தி.மு.க., எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. இப்பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை, தேர்தல் ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.
மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை செயலர் உத்தரவிட முடியாது; மாநில தேர்தல் ஆணையரே உத்தரவு வழங்குவார். தேர்தல் களம் வரும்போது, ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் அதிகாரிகள் சென்று விடுகின்றனர். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டதோ, அந்த சூழல் தமிழகத்துக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க., கவனமாக இருக்கிறது.
கோவை மேம்பாலப் பணி கடந்த ஆட்சியில் துவங்கியிருந்தாலும், வெறும் 80 கோடியே செலவிட்டிருந்தார்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவை முடிக்கப்பட்டு, 1,800 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பாலம் கட்டிய நிறுவனத்துக்கு பில் தொகை வழங்கப்பட்டு இருக்கும். எந்த ஆண்டு எவ்வளவு தொகை விடுவிக்கப்பட்டது என கேளுங்கள். 50 சதவீதம் முடித்திருந்ததாக கூறும் எதிர்க்கட்சியினர், ஆண்டு வாரியாக சொல்லட்டும். 2021ல் ஆட்சி முடியும்போது, அந்த பாலத்துக்கு செலவழித்த தொகை எவ்வளவு. 2022, 2023ல் செலவழித்தது எவ்வளவு, 2021ல் எத்தனை வழக்குகள் இருந்தன.
அதற்கு பின், எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன என்பதை விளக்க வேண்டும். 2021ல் இத்தனை கோடி செலவழித்தோம் என ஆதாரத்தோடு, எதிர்க்கட்சி தலைவரோ, அக்கட்சியை சார்ந்தவர்களோ சொல்ல வேண்டும்.
மற்ற கட்சிகளின் உள்விவகாரத்தை பேசுவது நன்றாக இருக்காது. அக்கட்சிகளை பார்ப்பது எங்கள் வேலையல்ல. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் அதிகமான ஓட்டு வாங்க வேண்டும் என்பதே எங்களது ஒற்றை இலக்கு. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., தயாராக இருக்கிறது.
நுாலகம், செம்மொழி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து நிதி வழங்கப்படுகிறது. பாதாள சாக்கடை பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
கடந்த ஆட்சியில் ரோடு போடாததால், சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளோம். கோவை மாநகராட்சி பகுதியில் விடுபட்ட சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. அதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு, சட்டசபை தேர்தலுக்கு முன் தார் ரோடு போடப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

