/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் புதிய அடையாளம்! கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கிறார் முதல்வர்
/
கோவையின் புதிய அடையாளம்! கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கிறார் முதல்வர்
கோவையின் புதிய அடையாளம்! கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கிறார் முதல்வர்
கோவையின் புதிய அடையாளம்! கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கிறார் முதல்வர்
UPDATED : செப் 15, 2025 06:23 AM
ADDED : செப் 15, 2025 01:23 AM

கோவை; பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, கோவை - அவிநாசி சாலை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ., துார உயர்மட்ட பாலத்தை, வரும் அக். 9ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கோவையில், அவிநாசி சாலை உப்பிலிபாளையத்திலிருந்து கோல்டுவின்ஸ் வரை, உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படும் என, 2020ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
அவரது ஆட்சிக்காலத்திலேயே பணிகள் துவங்கி நடந்து வந்தது. நான்கு வழி பாதையான பாலத்தின் கட்டுமான பணி, 50 சதவீதம் நிறைவடைந்திருந்தது.
2022ல் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, மேம்பாலத்தை 5.1 கி.மீ., துாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டது. பணிகள் 2025ம் ஆண்டு ஜன., மாதத்தில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், மின்புதைவடம், தொலைதொடர்பு வடம், இணையதொடர்பு கேபிள்கள் பூமியினுள் பதிக்கப்பட்டிருந்ததால், அதன் இணைப்புகளை துண்டித்து மீண்டும் இணைக்க காலதாமதம் ஏற்பட்டது.
வாகன ஓட்டிகள் வசதிக்காக ஹோப்காலேஜ், நவஇந்தியா, அண்ணாசிலை, விமானநிலையம் ஆகிய இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின், மேம்பாலத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, கலெக்டர் பவன்குமார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின், அமைச்சர் வேலு கூறியதாவது:
தமிழக முதல்வர், பொங்கல் பண்டிகைக்கு முன், மேம்பாலத்தை மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிகிறது. கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின், பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், திறப்பு விழாவுக்கு தயாராக இருப்பதாகவும், முதல்வரிடம் கூறினேன். முதல்வர் அக்., 9ம் தேதி கோவைக்கு வருகிறார். அன்றைய தினம் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவ்வாறு, அமைச்சர் வேலு கூறினார்.