தமிழக கடல் பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்க 'டெண்டர்' வரும் பிப்ரவரியில் வெளியாகிறது
தமிழக கடல் பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்க 'டெண்டர்' வரும் பிப்ரவரியில் வெளியாகிறது
ADDED : அக் 31, 2025 03:41 AM

சென்னை:“தமிழக கடல் பகுதியில், 500 - 1,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைப்பதற்கு, 2026 பிப்ரவரியில், 'டெண்டர்' வெளியாகும்,” என, மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
இந்திய காற்றாலை மின் சாதன உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், சர்வதேச காற்றாலை மின்சார கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது.
அதில், அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று பேசியதாவது:
துாய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களில் தற்சார்பு இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டில் காற்றாலை மின் சாதனங்கள், உதிரிபாகங்களின் உற்பத்தியை, 64 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக உயர்த்த வே ண்டும்.
உலகில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியிலும், காற்றாலை மின்சார நிறுவு திறனிலும் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. நாட்டின் 54,000 மெகா வாட் காற்றாலை மின் நிறுவு திறனில், தென் மாநிலங்களின் பங்கு 50 சதவீதம்.
கடலில் காற்றாலை அமைக்கும் நிறுவனங்களுக்கு உதவ மத்திய அரசு, 7,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழக கடல் பகுதியில், 500 - 1,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, 2026 பிப்ரவரியில் டெண்டர் கோரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம், 25,500 மெகா வாட்டிற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்துடன் தேசிய அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2021 முதல் தற்போது வரை, 3,500 மெகா வாட் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம், இந்தியா - டென்மார்க் பசுமை கூட்டு நிறுவனம் வாயிலாக தமிழக கடல் பகுதியில் நாட்டின் முதலாவது கடல் காற்றாலை திட்டத்திற்கு அடித்தளம் அமைத்து வருகிறது.
- சிவசங்கர் , தமிழக அமைச்சர்
இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், 3,000 மெகா வாட் திறனில் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன
சென்னை கண்காட்சியில், 20க்கும் மேற்பட்ட நாடுகள் உட்பட, 350 நிறுவனங்களின் அரங்கு இடம்பெற்றுள்ளன.

