கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல்
9ம் நூற்றாண்டு வரை கோவையை
உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை
ஆண்டது கன்னடம் பேசும் கங்க
மன்னர்கள். பின்னர் கொங்கு
சோழர்களும், பாண்டிய
மன்னர்களின் பிரதிநிதிகளும்
கோவையை ஆட்சி செய்துள்ளனர்.
வஞ்சித்துறைமுகம் என
அழைக்கப்படும் இப்போதைய கேரள
கடற்கரையில் வந்திறங்கிய
ரோமானிய வியாபாரிகள், கோவை
வழியாக முட்டம் மற்றும்
கொடுமணல் வந்து ரத்தின கற்களை
வாங்கி சென்றுள்ளனர்.
திருப்பூரில் இருந்து 20 கி.மீ.,
தூரமுள்ள கொடுமணலில் நடந்த
அகழ்வாராய்ச்சியில் இங்கு
ரோமானியர்கள் வந்து சென்றதின்
அடையாளமாக ஏராளாமான பொருட்கள்
கிடைத்துள்ளன.
நொய்யல் நதி: கோவை நகரம் ஒரு
காலத்தில் அடர்ந்த காடுகளாக
காட்சியளித்தது. கிடைத்த சில
இடங்களில் நெல், கரும்பு, வாழை
என பயிரிடப்பட்டது. இதற்கு
பெரிதும் உறுதுணையாக இருந்தது
காஞ்சிமாநதி என அழைக்கப்பட்ட
நொய்யல் நதியாகும்.
நொய்யல் ஆற்றின் குறுக்கே 700
ஆண்டுகளுக்கு முன்பே 23
தடுப்பணைகள் கட்டி, 100 கி.மீ.,
தூரத்திற்கு வாய்க்கால்
வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம்
36 குளங்களில் தண்ணீர்
சேமிக்கப்படுகிறது.