மாட்டுக்கொம்பு அபிஷேகம் : சிவபெருமானுக்கு
அபிஷேகம் செய்யும் போது மாட்டுக்கொம்பிலுள்ள சிறு
துவாரம் வழியாக அபிஷேகம் செய்வது மிகவும்
விசேஷமானது என சாஸ்திரங்களில் கூறப் பட்டுள்ளது.
சமஸ்கிருதத்தில் இதை "கோ சிருங்க அபிஷேகம்' என
சொல்வர். சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்யும்போது
மாட்டுக்கொம்பிலுள்ள துவாரம் வழியாக செய்தால் மகா
புண்ணியம் ஏற்படும். இந்த கொம்பின் வழியாக
பஞ்சகவ்யம் எனப்படும் பாலிலிருந்து பெறுகின்ற தயிர்,
வெண்ணெய், நெய், பசுஞ்சாணம் ஆகியவற்றின்
கலவையைக்கொண்டு அபிஷேகம் செய்வது மேலும்
புண்ணியத்தை தரும்.
பிராயசித்தமே இல்லாத பாவம் : இந்த உலகிலேயே
கொடிய பாவம் பசுக்களை வதைப்பதுதான். பசுக்களை
வதைத்தால் பிரம்மஹத்தியைவிட மிக மோசமான கோஹத்தி
என்ற பாவம் ஏற்படும். இதை "மாத்ருஹத்தி' என்றும்
சொல்வார்கள். பெற்ற தாயை ஒருவன் கொன்றால் அதற்கு
என்ன தோஷம் ஏற்படுமோ அதையும்விட கொடுமையான தோஷம்
பசுவை கொல்பவர்களுக்கு ஏற்படும். அது தருகின்ற பாலை
முழுமையாக கறந்து குடித்துவிட்டு கறவை நின்றதும்
அதனால் என்ன பயன் என்ற எண்ணத்தில் இறைச்சிக்
கூடத்திற்கு அனுப்பினால் நம்மைப் பெற்ற தாயார்
வயதாகி வேலை செய்ய முடியாமல் ஆனவுடன் அவளை கொலை
செய்தால் எப்படியோ அதற்கு சமமாகிவிடும். கோ மாமிசம்,
தாய் மாமிசத்திற்கு ஒப்பானது. எனவே பிராயசித்தமே
இல்லாத இந்த பாவத்தை யாரும் செய்யக்கூடாது.
பசு ஸ்லோகம் : மகாபாரதத்தில் வரும் சியவன
மகரிஷி என்பவர் பசுக்களின் மகிமையை எடுத்துக்
காட்டும் ஸ்லோகம் ஒன்றை சொல்கிறார்.
நிவிஷ்டம் கோகுலம் யத்ர ச்வாஸம் முஞ்சதி
நிர்பயம்!
விராஜயதி தம் தேசம் பாபம் சாஸ்யாபகர்ஷதி!!
"எந்த தேசத்தில் பசுக்கள் தங்களுக்கு இம்சை
நேருமோ என்று பயப்படாமல், கோகுலங்களில் நிம்மதியாக
மூச்சு விட்டுக்கொண்டு இருக்கின் றனவோ, அந்த தேசமே,
எல்லா பாவங்களும் விலகப்பெற்று, பிரகாசமாக
விளங்கும்' என்பது இதன் பொருள்.
இறப்புக்கு பிறகும் கோயிலுக்கு வரும் மாடுகள் :
இந்த உலகிலேயே இறப்பிற்கு பிறகும் ஆன்மிக ரீதியான
விஷயங்களில் பயன்படும் விலங்கு பசு மற்றும் காளை.
இவை இறந்தபிறகு தோலை எடுத்து மத்தளம், பேரிகை
போன்ற வாத்தியங்கள் தயாரிக்கும்போது
பயன்படுத்துகின்றனர். இவையே தினமும் கோயில்களில்
வாசிக்கப்படுகிறது. சங்கீதம் மனதிற்கு இனிமையை
தருவதுடன் நோய் போக்கும் கருவியாகவும் இருக்கிறது.
பசுவின் வயிற்றிலிருந்துதான் கோரோசனை என்ற
நறுமணப்பொருள் எடுக்கப்படுகிறது. இறைவனுக்கு தூப,
தீபம் காட்டும்போது கோரோசனை முக்கிய பொருளாக
இருக்கிறது. இதற்காக பசுக்களை வதைத்துவிடக் கூடாது.
இயற்கையாக மரணம் அடைந்தபிறகு அவற்றின் தோலை யும்,
கோரோசனையையும் எடுக்க வேண்டும்.
திருவிழாக்களில் மாட்டிற்கு முக்கியத்துவம்
தந்தது ஏன்? : நமது அன்றாட வாழ்வில் மற்ற
விலங்குகளை விட பசுவும், காளையும் நமக்கு
உயிரூட்டும் விலங்குகளாக திகழ்கின்றன. அதற்கு நன்றி
தெரிவிக்கும் வகையிலேயே மாடுகளுக்கு மட்டும்
தனிப்பட்ட முறையில் விழா எடுக்கப்படுகிறது. ஒரு
குழந்தை பிறந்ததும், அதற்கு பாலூட்டி உயிரூட்டுபவள்
தாய். அது ஒரு காலகட்டத்துடன் நின்றுவிடுகிறது.
அதன் பிறகு ஆயுள் முழுவதும் மனிதனுக்கு பால் தருவது
பசுக்கள். அதிலிருந்து கிடைக்கும் வெண்ணெய், நெய்
முதலான பொருட்கள் உடல் நலனுக்கு பயனுள்ளதாக
இருக்கிறது. வயதான பிறகு எதுவுமே சாப்பிடமுடியாமல்
போனாலும்கூட, பசும்பால் குடித்து உயிரைத் தக்க
வைத்துக் கொள்ள முடிகிறது. இதனால்தான் பசுவை
தாய்க்கு ஒப்பிட்டு "கோமாதா' என்று அழைத்தனர்.
காளைகள் நமக்கு உணவளிக்கும் விஷயத்தில் உதவுகின்றன.
வயல்களில் அவற்றைக் கொண்டு உழுவதன் மூலமே விதைக்க
முடிகிறது. இந்த காரணங்களால் திருவிழாக்களில்
மாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் "மாட்டுப்பொங்கல்'
என தனிப்பட்ட விழா ஒன்று உருவாக்கப்பட்டது.
அப்போது தாமரை மலர் போன்ற
வடிவத்தில் அவரது உள்ளங்கால் பகுதி இருக்கும்.
அந்த உள்ளங்காலை ஒரு பசு நக்கிக் கொண்டிருக்கும்.
புல்லாங்குழலும் கையில் வைத்திருப்பார். இவரை "வேணுகோபாலன்'
என்றும் சொல்வர்.
பசுஞ்சாணத்தின் மகிமை : இந்த உலகில் உள்ள
ஜீவராசிகளிலேயே, ஒரு ஜீவனின் கழிவுப்பொருளை புனிதமாக
பார்க்கிறோம் என்றால் அது பசுஞ்சாணம் மட்டும்தான். இதை
"கோமயம்' என்று சொல்வர். இது உடலையும், உள்ளத்தையும்
சுத்தி செய்வதாக இருக்கிறது. கழிவுப்பொருளான மலம்தான்
பொதுவில் மிகவும் அசுத்தமாக இருப்பது. நோய் நொடிகளை
பரப்புவது. கடும் நாற்றமுடையதாக இருப்பது. அது காலில்
பட்டால்கூட உடனே அலம்பி சுத்தம் செய்வோம். ஆனால்
பசுஞ்சாணம் மற்ற அசுத்தங்களை போக்குவதாக இருக்கிறது.
நோய்க்கிருமிகளை அழிக்கிறது. அதில் துர்நாற்றமும்
வீசுவதில்லை. வீட்டிற்கு ஆரோக்கிய லட்சுமியையும்,
மங்கள லட்சுமியையும் அது வரவழைக்கிறது. ஒரு காலத்தில்
சன்னியாசிகள் அக்னி சம்பந்தமான உணவுப்பொருட்களை
சாப்பிடமாட்டார்கள். அக்னி மூட்டி சமைத்த ஆகாரத்தை
ஒதுக்கிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒரு
பிரிவினர் விறகு, கரி இல்லாமல் பசுஞ்சாண வரட்டியில்
அக்னி மூட்டி அதைக்கொண்டு சமைத்தால் தோஷம் இல்லை
என்கிற வழக்கத்தை கொண்டிருந்தனர். பசுவின் சாணம்
இத்தகைய பெருமைகளை உடையது.
கஸ்மாலம் : அபிஷேகப் பிரியரான பரமேஸ்வரனுக்கு
விபூதி அபிஷேகம் மிகவும் விசேஷமானது. ஞானசம்பந்தர்
விபூதியின் பெருமையை விளக்கும் வகையில் தேவாரத்தின்
முதல் பாட்டில் "காடுடைய சுடலைப் பொடி பூசி' என
பாடுகிறார். விபூதியை மனதில் கொண்டே "மந்திரமாவது நீறு'
என்னும் திருநீற்றுப் பதிகத்தையும் பாடியுள்ளார்.
திருநீறு கோமய உருண்டைகளை தீயில் எரிப்பதன் மூலமே
கிடைக்கிறது. பசுவின் சாணத்திற்கு அத்தகைய சக்தி
இருக்கிறது.
திருநீறை அணிந்துகொள்வதால் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும்
குணமாகின்றன. மனதில் இருக்கும் ஆணவம் போன்ற நோய்களையும்
இது போக்குகிறது. மனநோயை சமஸ்கிருதத்தில் "கச்மலம்'
என்பர். இதுவே திரிந்து சென்னைத்தமிழில் "கஸ்மாலம்' என
ஆனது. "கஸ்மாலம்' என்றால் "மனதில் அழுக்கைக்
கொண்டிருப்பவர்' என அர்த்தம்.
புல்லுக்கு "கிராஸ்' என பெயர்வந்தது எப்படி? :
பசுவுக்கு ஆகாரம் கொடுப்பது மிகுந்த புண்ணியம். ஒவ்வொரு
மனிதனும் ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி அளவு புல்லாவது
பசுவுக்கு கொடுத்துவிட வேண்டும். இதற்கு
சமஸ்கிருதத்தில் "கோ க்ராஸம்' என பெயர். "க்ராஸம்'
என்றால் "ஒரு வாய் ஆகாரம்' என பொருள். திருமூலர் தனது
பாடல் ஒன்றில்,
"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுறை தானே'
என பாடியுள்ளார். இதில் சொல்லப்பட்டுள்ள "பசுவுக்கொரு
வாயுறை' என்பது "ஒரு கைப்பிடி புல்' என்பதைக்
குறிக்கும். க்ராஸம் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே
ஆங்கிலத்தில் "கிராஸ்' என்ற சொல் உருவானது.
பசு, காளைகளுக்கு உணவிட சுலப வழி : பசுக்களின்
வயிறு வாடினால் அந்த நாட்டிற்கு நல்லதல்ல. அந்த நாடு
வறுமையில் மூழ்கிப்போகும். ஒரு காலத்தில் நமது நாடு
செல்வச் செழிப்போடு திகழ பசுக்கள் பராமரிக்கப்பட்டதே
காரணமாக இருந்தது. திருப்பாவையில் ஆண்டாள் பாடும்போது
பசுக்கள் பராமரிக்கப் பட்டதால் ஆயர்பாடி எந்த அளவுக்கு
செல்வச்செழிப்புடன் இருந்தது என்பதை
தெளிவுபடுத்துகிறாள். பசுக்களுக்கு உணவு ஊட்ட மிகுந்த
சிரமப்பட தேவையில்லை. நம் தினமும் சாப்பிடும்
காய்கறிகளின் தோலை பசுவுக்கு ஆகாரமாக போடும்படி தகுந்த
ஏற்பாடு செய்துவிட்டாலே எத்தனையோ பசுக்களின் வயிறு
நிரம்பிவிடும். வீடுகள், ஆஸ்டல்கள், ஓட்டல்களில்
ஏராளமான காய்கள் நறுக்கப்படுகின்றன. அவற்றின் கழிவை
குப்பைத்தொட்டியில் கொட்டி வீணாக்காமல் பசுக்களை
கட்டியிருக்கும் கொட்டிலில் உள்ள தொட்டியில்
போட்டுவிட்டாலே போதும். ஆனால் இதை சேகரிப்பதற்கென எல்லா
ஊர்களிலும் ஆன்மிக சங்கங்கள் முன்வர வேண்டும். இதன்
காரணமாக குப்பை சேருவதும் தடுக்கப்படும். நமது
ஜனத்தொகையின் விகிதத்தோடு ஒப்பிடும்போது பசுக்களின்
எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். அதிலும்
வசதியானவர்கள் தங்கள் பண்ணைகளில் வளர்க்கும் மாடுகளை
தவிர்த்துவிட்டால் எண்ணிக்கை மிக மிக குறையும்.
கசாப்புக் கடைகளுக்கு போகக்கூடிய பசுக்களை மட்டும்
காப்பாற்றுவதை முதன்மையான குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
இதை மனதில் கொண்டு காய்கறித் தோல், சாதம் வடித்த கஞ்சி
ஆகியவற்றை சேகரித்து பசுக்களுக்கு கொடுக்கலாம்.
வீட்டுத் தோட்டங்களில் ஒரு சிறிய இடத்தில் அகத்திக்கீரை
பயிரிட்டு பசுக்களுக்கு கொடுத்தால் கணிசமான உபகாரம்
செய்த பலன் கிடைக்கும். பசுக்களுக்கு உணவிடுவதன் மூலம்
அந்த பகவானுக்கே உணவிட்டதுபோன்ற உணர்ச்சி வரவேண்டும்.
இந்த உணர்வு வந்துவிட்டால் பசுக்கள் பாதுகாக்கப்படும்.
நாடும் முன்னேறும்.
போபாலில் நடந்த அதிசயம் : மத்திய பிரதேச மாநிலம்
போபாலில் சில ஆண்டுகளுக்கு முன்பு விஷவாயு கசிந்து
ஏராளமானோர் இறந்தனர். அந்த சம்பவம் நடந்தபோது ஒரே ஒரு
வீட்டில் மட்டும் யாகம் நடந்துகொண்டிருந்தது. அந்த
வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அதிசயமாக உயிர்தப்பினர்.
இதற்கான காரணத்தை ஆய்வு செய்தபோது யாக குண்டத்தில் பசு
வரட்டிகள் பயன்படுத்தப் பட்டது தெரியவந்தது.
யாகப்புகையோடு அந்தணர்கள் கூறிய மந்திரங்களும்
இணைந்துகொண்டதால் அவர்கள் விஷவாயுவிலிருந்து தப்பினர்.
ரஷ்ய விஞ்ஞானிகள்கூட வரட்டிப்புகை மிகவும் சக்தி
வாய்ந்தது என்றும், சுற்றுப்புற சூழலை
பாதுகாக்கக்கூடியது என்றும் பரிசோதனைகள் மூலம் கண்டு
பிடித்து சொல்லியிருக்கிறார்கள்.
எல்லா உயிர்களிடமும் தாயன்பு : பசு என்பது ஒரு
மிருகமாக நம் கண்களுக்கு தெரிகிறது. பூமி என்பது ஏதோ
ஒரு ஜடப்பொருளாக தெரிகிறது. மிருகமாயினும்,
ஜடப்பொருளாயினும் வேறு என்ன வகை பொருட்களானாலும்,
அவற்றிடம் தாயன்பைக் காண வேண்டும் என நமது முன்னோர்கள்
விரும்பினார்கள். அந்த தாய் தத்துவத்தை உணர்த்தவே
பசுவிற்கு "கோமாதா' என்றும், பூமிக்கு "பூமாதா' என்றும்
பெயர் வைத்தார்கள்.