Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

08. நமக்கு எப்போதும் அதிசயம் மதுரை மீனாட்சி கோயில்

 

உலக அதிசயங்களில் இடம் பெறாவிட்டாலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் நிச்சயம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடம்பெற்றிருக்கும். தமிழகத்தில் உள்ள 64 சக்தி பீடங்களில் முதன்மையானது, சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் நடந்தது என பல பெருமைகளை தன்னகத்தே கொண்டது மீனாட்சி கோயில்.  புராண காலத்தில் இந்திரனின் தோஷத்தை தீர்க்க கடம்பவன காட்டில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு இந்திரனால் இந்திர விமானம் அமைக்கப்பெற்று பொலிவு பெற்றது இக்கோயில். பின்னர் குலசேகரப்பாண்டிய மன்னரால் காடு அழிக்கப்பட்டு கோயிலும், மதுரை நகரமும் உருவாக்கப்பட்டது.

 

சிவபெருமான் தன் சடைமுடியில் வீற்றிருக்கும் நிலவு மூலமாக மதுரத்தை(தேன்) பொழிந்து புனிதமாக்கியதால் "மதுரை' என்று பெயர் பெற்றது. மீனாட்சி கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 9 நிலை வெளிக் கோபுரங்கள் நான்கும், கோயிலுக்குள் 7 நிலை கொண்ட கோபுரம் ஒன்றும், 5 நிலை கொண்ட கோபுரங்கள் ஐந்தும், 3 நிலைகளை கொண்ட கோபுரங்கள் இரண்டும், இரு தங்க விமானங்களும் உள்ளன. ராஜகோபுரத்தை சுந்தரபாண்டியன் மன்னரும் (1216-38), தெற்கு கோபுரத்தை செவ்வந்தி மூர்த்தி என்பவரும்(1559), மேற்கு கோபுரத்தை பராக்கிரம பாண்டியனும்(1315-47) கட்டினர். கிருஷ்ண வீரப்ப நாயக்கரும்(1564-1572) கட்டதுவங்கி முழுமை பெறாததால் மொட்டை கோபுரம் என்றழைக்கப்படுகிறது. பொற்றாமரைக்குளத்தின் வடபகுதியில் திருவிளையாடல் ஓவியங்களும், ஊஞ்சல் மண்டபத்தின் கிழக்கில் மண்டப கூரைப்பகுதியில் ராணிமங்கம்மாள் காலத்து ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. கலைக்கோயில் என்று கூறும் அளவிற்கு பல அற்புதமான ஓவியங்கள், சிற்பங்கள் பரவி கிடக்கின்றன. ஏழிசையைத் தரும் இசைத்தூண்களில் ஐந்து வடக்கு கோபுர நுழைவு வாயில் இருபுறமும், மற்றவை ஆயிரங்கால் மண்டப நுழைவு வாயில் இருபுறமும் உள்ளன. இன்றும் பிரமிப்பாக காட்சியளிக்கும் ஆயிரங்கால் மண்டபம் கி.பி. 16ம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. மண்டபத்தின் உட்பகுதியில் எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் வரிசையாக தெரியுமாறு நேர்த்தியுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபம் 1966ல் அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. கோயில் முழுவதும் 44 கல்வெட்டுகள் உள்ளன. கோயிலுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்ட நிலங்கள், வழிபாட்டு முறைகள், சமூகபழக்கவழக்கங்கள் குறித்து இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. விழா நகரம் என்று குறிப்பிடுவதற்கு ஏற்ப ஒவ்வொரு தமிழ் மாதமும் கோயிலில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அணிவிக்கப்படும் தங்க, வைர ஆபரணங்கள் விலை மதிப்பு உள்ளவை. இதில் பாண்டிய மன்னரால் கொடுக்கப்பட்ட தொங்கல் அணியும், திருமலை நாயக்கர் தந்த ரத்தினம், முத்துக்கள் இழைத்த முடியணியும், ஆங்கிலேயேர் தந்த 108 பவுன் பொன் வடமும், மதுரை கலெக்டராக இருந்த ரோஸ் பீட்டர் கொடுத்த தங்க அங்கவடிகளும் முக்கியமானவை. 1981ல் தங்க ரதம் செய்யப்பட்டது. கோயிலில் மொத்தம் 231 உற்சவ திருவுருவங்கள் உள்ளன. இதுதவிர வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்ட வாகனங்கள், சப்பரங்கள் மற்றும் அம்மன் தேர், சுவாமி தேர், திருவாதவூர் தேர் உள்ளன. மேலும் கோயிலுக்கு சொந்தமாக 748 ஏக்கர் நன்செய் நிலங்களும், 435 புன்செய் நிலங்களும் இருப்பதோடு, 845 கட்டடங்களும் உள்ளன. இப்படி பல ஆச்சரியங்களையும், பிரமிப்புகளையும் தன்னகத்தே கொண்ட மீனாட்சி கோயில் நமக்கு எப்போதும் அதிசயம்தானே!

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்  

வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in