இதிலிருந்து கரும்பின் முக்கியத்துவத்தை நாம்
உணரமுடிகிறது. தமிழ் இலக்கிய நூல்களில் கரும்புக்கு
"புனர் பூசம்' என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.
கரும்பு பணப் பயிர்களில் முதன்மையானது. நம்
நாட்டில் ஆலைக்கரும்பு, தீனிக்கரும்பு (படிப்படியாக
மருவி சீனிக்கரும்பாகியது) ஆகிய ரகங்கள் உள்ளன.
ஆலைக் கரும்பு: தமிழகத்தில் அகில இந்திய
வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் கோவையில்
உள்ள கரும்பு அபிவிருத்திக் கழகம், கடலூர்,
திருச்சி அருகே சிறுகமணி, வேலூர் மாவட்டம்
மேலாலத்தூர் ஆகிய கரும்பு ஆராய்ச்சி நிலையங்கள்
மூலம் புதிய கரும்பு வகைகள்
கண்டுபிடிக்கப்படுகின்றன. அவை தமிழகத்தில் உள்ள 36
கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம்
விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆலைக்
கரும்பில் "கோ 419' ( கோவை) துவங்கி நூற்றுக்கும்
மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் சர்க்கரை அளவு
அதிகமாக இருக்கும். "கோ 93004', "கோ 86032',
"கோ.கு.5' ஆகிய ரகங்களை ராமநாதபுரம் மாவட்டத்தை
தவிர தண்ணீர் வசதியுள்ள பிற பகுதி விவசாயிகள்
அதிகம் பயிரிடுகின்றனர். இவற்றில் 75 கிலோ முதல்
100 கிலோ வரை பிழிதிறன் உள்ள சர்க்கரை கிடைக்கிறது.
ஆலையை தவிர விவசாயிகள் தாங்களாகவே சர்கரை, வெல்லம்
தயாரித்து விற்பனை செய்கின்றனர். ஒரு முறை கரும்பு
கரணை விதையை நடவு செய்தால் 7 முதல் 10 ஆண்டுகளுக்கு
மகசூல் கிடைக்கும்.
தீனிக்கரும்பு: கருப்பு நிறத்தில் காணப்
படும் இக்கரும்பில் சர்க்கரை அளவு மிககுறைவாக
இருக்கும். ஆதலால் சாப்பிடுவதற்கு மட்டுமே
பயன்படுத்தப்படுகிறது. வண்டல் மண் மற்றும் வடிகால்
வசதியுள்ள மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை, மாங்குளம்,
மேலூர், கொட்டாம்பட்டி, தேனி, சிவகங்கை, விருதுநகர்,
தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு,, விருதாச்சலம்
பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு
ஆண்டும் பிப்ரவரியில் கரும்பு நடவு துவங்கும். 10
மாதம் கழித்து நவம்பரில் அறுவடை நடைபெறும். ஆலைக்
கரும்பை போல் வெட்டாமல் தீனிக் கரும்பை வேருடன்
பிடுங்குகின்றனர். மிகவும் அரியவகை "ராமக்கரும்பு'
என்ற ரகம் பழநி, ஒட்டன்சத்திரம் பகுதி களில்
மட்டும் பயிரிடப்படுகிறது. தைப்பொங்கலையொட்டி
தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆந்திரா, கர்நாடகா,
குஜராத் மாநிலங்களுக்கும் மும்பை, கோல்கட்டா
நகரங்களுக்கும் தீனிக்கரும்பு அதிகம் ஏற்றுமதி
செய்யப்படுகிறது. மேலும் வட மாநிலங்களில் துர்க்கை
பூஜையின் போது கரும்பை பயன்படுத்துகின்றனர்.
மதுரையில் ஒரு கட்டு கரும்பு (15 கொண்டது) ரூ.100
முதல் ரூ.110 வரை, சென்னையில் ரூ. 110 முதல் ரூ.
130 க்கும், வடமாநிலங்களில் ரூ. 250 முதல் ரூ.300
க்கு விற்பனையாகிறது.
மருத்துவ பயன்கள்: ஒவ்வொரு ஆண்டும் மழை
மற்றும் பனி குளிர்காலம் முடிந்து கோடை காலம்
துவங்கும் போது தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தீனிக்கரும்பு குளிச்சித் தன்மையுடையது. மஞ்சள்
காமாலை, அம்மை ஆகிய நோய்களுக்கு கரும்புச்சாறு
கொடுத்தால் குளிர்ச்சியை ஏற்படுத்தி மேலும் நோய்
பரவாமல் தடுக்கும். கிராமங்களில் கரும்புச்சாறை மண்
சட்டியில் புளிக்க வைத்து சாராயம் போன்ற "கருப்பங்
காடி' பானத்தை தயாரிப்பர். இதை தண்ணீர் தாகம்
அதிகம் உள்ளவர்களுக்கு கொடுத்தால் நா வறட்சி
அடங்கும். நன்றாக பசி எடுக்கும். "கருப்பங்காடி'
பானத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால்
தொண்டைப்புண், மூக்குப்புண் குணமாகும். பூச்சிக்
கடிக்கு சுண்ணாம்புடன் கலந்து உடலில் தேய்த்தால்
நல்லது. கரும்பை கடித்து சுவைப்பதால் பல் ஈறுகள்
உறுதியாகும். என்னங்க.., இதைப் படிக்கும் போதே
கரும்பை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என தோன்றுமே!