Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

03. ஸ்பெஷல் தர்ஷன்


சூரியனார் கோயில்


சூரியனுக்கென தனிக்கோயில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயிலில் மட்டுமே அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலை, பொங்கலை ஒட்டி வாசகர்கள் ஸ்பெஷல் தர்ஷன் செய்யப் போகிறீர்கள்!
 


 

தல வரலாறு: காலமாமுனிவர் என்பவர் முக்காலங்களையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். ஒரு சமயம் அவருக்கு கிரக மாற்றங்களால் தொழுநோய் உண்டாகப்போவதை, காலதேவன் மூலமாக அறிந்தார். தனக்கு நோய் உண்டாகாமல் இருக்க நவக்கிரகங்களை வேண்டினார். கிரகங்களும் அவ்வாறே அருளின. இதையறிந்த பிரம்மன், கிரகங்களுக்கு சுயமாக வரம் தர தகுதியில்லை என்று சொல்லி, முனிவருக்கு உண்டாகவிருந்த நோயை கிரகங்களுக்கு உண்டாகும்படி சபித்து விட்டார். எனவே, பூலோகம் வந்த நவக்கிரகங்கள் இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து விமோசனம் பெற்றன. கிரகங்கள் அனைத்துக்கும் உலக ஜீவன்களின் பாவ, புண்ணியத்துக்கேற்ப பலன்களைத் தரும் உரிமையையும் கொடுத்தார். சூரியன் நடுவில் இருக்க, எல்லா கிரகங்களும் தனித்தனி சன்னதிகளில் சுற்றியிருக்க ஒரு கோயிலும் எழுப்பப்பட்டது.

உதிக்கும் திசையில் சூரியன்


நவக்கிரக மண்டபத்தில் சூரியன், கிழக்கு நோக்கியிருப்பார். ஆனால், இக்கோயிலின் மூலவரான சூரிய பகவான் மேற்கு நோக்கி இருக்கிறார். இத்தலத்தை அதிகாலையில் தரிசிக்க செல்பவர்கள் ஒரே நேரத்தில் உதிக்கும் சூரியனையும், மூலஸ்தானத்தில் சிவசூரிய பெருமானையும் சேர்த்து தரிசிக்கலாம். சிவனுக்கு வில்வ இலை, விஷ்ணுவுக்கு துளசியால் அபிஷேகம் செய்வது போல, சூரியனுக்கு "நொச்சி' என்ற இலை கொண்டு அபிஷேகம் செய்கின்றனர். பிராணநாதேஸ்வரர் கோயிலே பிரதானம் சூரியனார் கோயிலிலுள்ள நவக்கிரக கோயில் தனிக்கோயிலைப் போன்ற தோற்றத்தில் இருந்தாலும், இங்குள்ள பிராணநாதேஸ்வரர் கோயிலே முக்கியக் கோயில் ஆகும். நவக்கிரகங்கள் தங்களுக்கு தொழுநோய் ஏற்படாமல் இருக்க ஸ்தாபித்த லிங்கத்தைக் கொண்டு எழுப்பப்பட்ட கோயில் இது. சூரியனார் கோயில் வருபவர்கள் முதலில் பிராணநாதேஸ்வரர், மங்களாம்பிகை கோயிலுக்கு சென்று வணங்கிவிட்டு, அதன்பிறகே சூரியனார் கோயிலுக்குள் செல்ல வேண்டும். ஏனெனில், பிராணநாதேஸ்வரர் கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. அந்தக் கோயிலின் நவக்கிரக சன்னதியாகவே சூரியனார்கோயில் கருதப்படுகிறது.

சிவன் பெயரில் சூரியன்
சூரியனார் கோயிலில் உள்ள மூலவர், "சிவசூரிய பெருமான்' என்றே அழைக்கப்படுகிறார். சிவனை வழிபட்டவர் என்பதாலும், இவருக்குரிய அதிதேவதை சிவன் என்பதாலும் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். ருத்ராட்ச மாலை அணிந்திருக்கும் இவர், தாமரை பீடத்தில் நின்றபடி வலப்புறம் சாயாதேவி, இடப்புறம் உஷாதேவியுடன் காட்சி தருகிறார். சாயாதேவியின் கையில் நீலோத்பவ மலரும், உஷாதேவியிடம் தாமரையும் உள்ளன.
கோதுமை பொங்கல்
கோயில்களில் சுவாமிக்கு சர்க்கரைப்பொங்கல் வைத்து வழிபடுவர். ஆனால், இக்கோயிலில் கோதுமைப்பொங்கல் வைக்கப் படுகிறது. சூரியபகவானுக்குரிய தானியம் கோதுமை. எனவே, கிரக தோஷம் உள்ளவர்கள் இவருக்கு கோதுமை சர்க்கரைப்பொங்கல், கோதுமை பாயாசம் படைத்து வழிபடுகிறார்கள். பொங்கலன்று, கோதுமை பொங்கலே நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

சூரியனின் முன்னால் குரு


இக்கோயிலில் சூரியபகவானுக்கு எதிரே, குரு பகவான் நின்ற கோலத்தில், ஒரு மண்டபத்தில் இருக்கிறார். அவரது பின்னால், சூரியனுக்குரிய குதிரை வாகனம் இருக்கிறது. சிவாலயங்களில், சுவாமி எதிரே நந்தியும், அம்மன் எதிரே சிங்கமும் இருக்கும். இங்கே, சூரியனின் வெப்பத்தால் அவரது வாகனம் எரிந்து விடும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், அவர் முன்னால் மரியாதைக்குரிய குருவை நிறுத்தி விட்டனர். மேலும், குரு பார்க்க கோடி நன்மை சூரியனுக்கு கிடைக்கிறது. அந்த கோடி நன்மைகளையும், சூரியன் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு கொடுக்கிறார் என்பது ஐதீகம்.

12 சூரியர்கள்


இங்குள்ள விமானத்தில் 12 சூரியன் சிலைகளை தரிசிக்கலாம். மாதத்திற்கு ஒரு சூரியன் வீதம் வணங்க வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். நான்கு திசைகளிலும் நான்கு குதிரை வாகனங்களும் உள்ளன.


தினம்தோறும் ஹோமம்


இக்கோயிலில் கிரக தோஷ நிவர்த்திக்காக தினமும் காலை 9 மணி, மாலை 4 மணிக்கு நவக்கிரக ஹோமம் நடக்கிறது. தோஷ பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் இந்த ஹோமத்தில் பங்கேற்கலாம். இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையில் சூரியனுக்கு மகாபிஷேகம் மற்றும் சிறப்பு ஹோமம் நடக்கிறது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள் இங்கு மிக விசேஷம். அப்போது சுவாமி சப்பரத்தில் வீதியுலா செல்வதோடு, சூரிய புஷ்கரிணியிலும் தீர்த்தமாடுகிறார்.

துவக்கமும், முடிவும் இவரிடமே...!


விநாயகரிடம் ஆரம்பித்து, முருக தரிசனத்தில் முடிப்பது சிவாலயங்களில் உள்ள நடைமுறை விதி. ஆனால், இக்கோயிலில் துவங்குவதும், முடிவதும் விநாயகரிடம்தான். பக்தர்கள் முதலில் கோள் வினை தீர்த்த விநாயகரை வணங்கிவிட்டு அதன்பின் கிரகங்களை வணங்க வேண்டும். கடைசியிலும் கோள் தீர்த்த விநாயகரை வணங்கியே முடிக்க வேண்டும். இவ்வாறு தரிசனம் செய்வதால் கிரக தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். கிழக்கு நோக்கியிருக்கும் இந்த விநாயகரின் திருமேனியில் தினமும் சூரிய ஒளி விழுவது மற்றொரு சிறப்பம்சம். ஆடி கடைசி செவ்வாயன்று, இந்த விநாயகருக்கும், தை 3ம் ஞாயிறன்று கிரகங்களுக்கும் சந்தனக்காப்பு செய்யப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 10ல் சந்தன காப்புடன் கிரகங்களை தரிசிக்கலாம். அன்று ஹோமம், அபிஷேகம் கிடையாது.

தரி-சன முறை

சூரி-ய-னார் கோயி-லுக்கு செல்ப-வர்கள் முத-லில், கோயி-லுக்கு வெளியே சற்று தூரத்தில் இருக்கும் பிரா-ண-நா-தேஸ்வ-ரர், மங்களாம்பி-கையை வணங்கி-விட்டு அதன்பின் இக்கோ-யி-லுக்கு வர வேண்டும். கோள்வினை தீர்த்த விநா-ய-கரை வணங்கி அதன் பின் மூலஸ்தா-னத்திற்கு சென்று உஷா, பிரத்யு-ஷா-வு-டன் இருக்கும் சூரி-ய-ப-க-வா-னை-யும், அவ-ருக்கு எதி-ரே-யுள்ள குரு-ப-க-வா-னை-யும் வணங்கி-விட்டு, தெற்கு பிர-கா-ரம் சென்று சனீஸ்வ-ரர், புதன், செவ்வாய் ஆகி-யோ-ரை-யும், பின் சந்தி-ரன், கேது, சுக்கி-ரன், ராகு ஆகி-யோ-ரை-யும் வணங்க வேண்டும். பின்பு ராகு சன்னதி அரு-கி-லி-ருக்கும் சண்டி-கேஸ்வ-ரரை வணங்கி-விட்டு, மீண்டும் வந்த பாதை-யி-லேயே திரும்பி வந்து அனைத்து கிர-கங்க-ளை-யும் மறு-முறை வணங்க வேண்டும்.

அனுக்கிரக நவக்கிரகங்கள்


சாபம் நீங்குவதற்காக கிரகங்கள் வழிபட்ட தலமென்பதால், இக்கோயிலில் ஒன்பது கிரகங்களும் ஆயுதம், வாகனம் எதுவுமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன. எனவே, இங்கு வேண்டிக்கொள்ள கிரக தோஷங்கள் விலகி, அனுக்கிரகம் உண்டாவதாக நம்பிக்கை.

 

தரிசன முறை


சூரியனார் கோயிலுக்கு செல்பவர்கள் முதலில், கோயிலுக்கு வெளியே சற்று தூரத்தில் இருக்கும் பிராணநாதேஸ்வரர், மங்களாம்பிகையை வணங்கிவிட்டு அதன்பின் இக்கோயிலுக்கு வர வேண்டும்.
 

கோள்வினை தீர்த்த விநாயகரை வணங்கி அதன் பின் மூலஸ்தானத்திற்கு சென்று உஷா, பிரத்யுஷாவுடன் இருக்கும் சூரியபகவானையும், அவருக்கு எதிரேயுள்ள குருபகவானையும் வணங்கிவிட்டு, தெற்கு பிரகாரம் சென்று சனீஸ்வரர், புதன், செவ்வாய் ஆகியோரையும், பின் சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகியோரையும் வணங்க வேண்டும். பின்பு ராகு சன்னதி அருகிலிருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு, மீண்டும் வந்த பாதையிலேயே திரும்பி வந்து அனைத்து கிரகங்களையும் மறுமுறை வணங்க வேண்டும். இறுதியாக கோள்வினை தீர்த்த விநாயகரை வணங்கி, கொடி மரத்தின் அருகே ஆண்கள் சாஷ்டாங்க நமஸ்காரமும் (தரையில் கை, கால்களை நீட்டி படுத்து) பெண்கள் பஞ்ச நமஸ்காரமும் (முழங்காலிட்டு தலை வணங்கி) செய்ய வேண்டும். பூஜையிலும் இந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.

தேஜஸ் சண்டிகேஸ்வரர்


சண்டிகேஸ்வரர், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். கையில் தாமரை மலர் வைத்திருக்கும் இவர், ஒளி தரும் சூரியனுக்கு உரியவராக இருப்பதால், "தேஜஸ் சண்டிகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு "சவுர சண்டிகேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.

திருவிழா
சூரியன் வடதிசை நோக்கி பயணம் செய்யும் உத்தரயாண புண்ணிய காலத்தையொட்டி இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாவில் பத்தாம் நாளில் சூரியன் காவேரிக்கு எழுந்தருளி, தீர்த்த நீராடுகிறார். பிரம்மோற்ஸவத்தில்  சூரியன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா மற்றும் அஷ்டமி திதியில் காவிரியில் தீர்த்தவாரியும் நடக்கிறது. தங்கக்கவச திருப்பணி சூரியனார் கோயில் சிவசூரியபெருமானுக்கு தற்போது தங்கக்கவசம் செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு ரூ.90 லட்சம் செலவாகும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகளும் நடக்கவுள்ளது. பக்தர்களும் இந்த திருப்பணியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.


இருப்பிடம், தரிசன நேரம்

கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ., தூரத்தில் ஆடுதுறை சென்று, அங்கிருந்து 3 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. காலை 7 - 12.30 மணி, மாலை 4 - இரவு 8.30 மணி வரையில் நடை திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 5.30, மாலை 3.30க்கே நடை திறக்கப்பட்டு விடும். போன்: 04365 - 247 2349.

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்  

வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in