Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

06.கோட்டைகளின் கோட்டை! ( வரதராஜன்)



ராஜஸ்தான், பிரமாண்டமான கோட்டைகள், பாலைவனம், பாலைவன படகு என செல்லமாக அழைக்கப்படும் ஒட்டகங்கள், மார்பிள்ஸ், ஆபரணங்கள் மற்றும் இந்தியாவின் எல்லை மாநிலம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள பெருமை பெற்றது. இம்மாநில மக்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுடையவர்கள் என்பது மட்டுமல்லாது தீவிர ராம பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம பகுதி மட்டுமின்றி நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூட ஒருவரை ஒருவர் சந்திக்கும்பொழுது வணக்கத்திற்கு பதிலாக,"ராம் ராம்' என்று மரியாதை செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


 

ராஜஸ்தான் மாநிலம் உலக அளவில் சுற்றுலா பயணிகளையும் சமீப காலமாக வெகுமாக கவர்ந்து வருகிறது.

 

இந்திய வரைபடத்தின் மேற்கு பகுதியில் அமர்ந்திருக்கும் ராஜஸ்தான் மாநிலம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள எல்லைக் கோட்டை ஒட்டியிருப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இந்திய ராணுவ வீரர்களின் முகங்கள் கம்பீரத்துடன் உலா வரும் போது மெய் சிலிர்க்க வைக்கும்.

குறிப்பாக பிக்கானேர், ஜோத்பூர், ஜெய் சால்மர் போன்ற எல்லை பகுதி மாவட்டங்களில் சர், சர் என தலைக்கு மேலே ராணுவ விமானங்கள் சீறிக் கொண்டே இருக்கும்.

 

மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூர், கோட்டைகளின் கோட்டையாக உள்ளது. பிங்க் சிட்டி என்றழைக்கப்படும் ஜெய்ப்பூர் நகரில், நமது கோடம்பாக்கத்து கேமராக்கள் பலமுறை வலம் வந்துள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 31 மாவட்டங்கள் உள்ளன. இதில் அதிக நில பரப்பளவு கொண்ட மாவட்டம் ஜெய்சால்மர். இந்த மாவட்டத்தின் செல்லப் பெயர் கோல்டன் சிட்டி. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 38 ஆயிரத்து 401 சதுர கி.மீ., மிக குறைந்த நில பரப்பளவை கொண்ட மாவட்டம் தல்பூர். இந்த மாவட்டத்தின் பரப்பளவு 34 சதுர கி.மீ., தான்.

ஆறு கோடி மக்கள் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஹிந்தி மற்றும் ராஜஸ்தானி மொழி தான் வழக்கத்தில் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டைகள் கட்டட கலைக்கு மிகச் சிறந்த சான்று.

ஒரு கோட்டை என்பது ஒரு சிறு கிராமத்திற்கு இணையான பரப்பளவை கொண்டிருக்கும். பிரமாண்டமான மதில் சுவர்களும், அழகிய சிற்ப வேலைபாடுகள், வண்ணகலவை பூச்சுகள், நேர்த்தியான அறைகள், தர்பார்கள், அரசவை கூடம் என கலை நுணுக்கங்களுடன் கூடிய பல பகுதிகள் அதன் மெருகு குறையாமல் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் சில கோட்டைகள் இன்னமும் அந்த கோட்டைகளில் வாழ்ந்த, ஆண்ட அரசர்களின் வாரிசுகளாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஜோத்பூர் கோட்டை மிக நேர்த்தியானது மட்டுமின்றி, அக்காலத்தில் போர் தொடுத்து வந்த பிற மன்னர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.

அந்த அளவிற்கு அந்த காலத்திலேயே உறுதியானது மட்டுமின்றி, பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி கட்டட கலையில் மிக நேர்த்தியாக உருவாக்கி இருந்தனர் என்பது இப்பொழுதும் ஆச்சரியப்பட வைக்கும் உண்மை.

சுற்றுலாவுக்கு ஏற்ற ஊர்களான ஜெய்ப்பூர், அஜ்மீர், ஜோத்பூர், பிக்கானேர், உதய்ப்பூர், ஜெய்சால்மர், மவுண்ட் அபு, புஷ்கர் கோடா என எந்த சுற்றுலா நகரத்திற்கும் செல்ல பஸ் மற்றும் ரயில் வசதி உண்டு. தனியார் டிராவல்ஸ் கம்பெனிகள் அதிக அளவில் சொகுசு பேருந்துகளை இயக்குகின்றன.

அதே நேரத்தில் பயண கட்டணம் அதிகமாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். அரசு பேருந்துகளின் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் 50 ரூபாய்க்குள் தான் வித்தியாசம் இருக்கும். இம்மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கிடையே உள்ள தொலைவு 200, 300 கி.மீ., தூரத்தில் தான் இருக்கும்.

 

சுற்றுலா செல்பவர்கள் குறிப்பாக, ஒரு நாளை கூட வீணாக்க விரும்பாதவர்களுக்கு இரவு நேர பயணமே மிக சிறந்தது. ஏனென்றால், பகல் பொழுதில் சுற்றுலா தலத்தை முழுமையாக கண்டுகளித்துவிட்டு இரவு நேர பயணத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் மறுநாள் மற்றொரு சுற்றுலா தலத்தை கண்டுகளிக்கலாம். இதனால், நேரம் மிச்சம் மட்டுமின்றி பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

ராஜஸ்தானின் எந்த ஒரு சுற்றுலா நகரத்தின் விடுதியில் தங்கினாலும், அந்த விடுதியின் மூலமாகவே அந்த சுற்றுலா நகரத்தின் அனைத்து பகுதிகளையும் கண்டு ரசித்துவிட்டு, அவர்களின் உதவியுடனேயே அடுத்த சுற்றுலா தலத்திற்கு செல்வதற்கான பயண ஏற்பாடுகளை செய்துக் கொள்ளலாம் என்பது இன்னொரு சிறப்பு.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானேர் மாவட்டத்தில் கருணை மாதா கோவில் என்றழைக்கப்படும் எலிக் கோவில் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் பிக்கானேர் நகரத்தில் இருந்து 30 கி.மீ., தொலைவில் தேசிய நெடுஞ்சாலையிலேயே தேஷ்னுக் என்ற ஊரில் உள்ளது.

எங்கு திரும்பினாலும் எலிகள் கீச், கீச் என கத்திக் கொண்டே ஓடி கொண்டேயிருக்கும். கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் எலிகளை மிதிக்காமல் அடி மேல் அடி எடுத்து வைத்துத் தான் செல்ல வேண்டும். தப்பித் தவறி எலிகளை மிதித்து விட்டால் தோஷம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. வெள்ளியால் செய்த எலி உருவத்தை காணிக்கையாக்கினால் தோஷம் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

இக்கோவிலின் முக்கிய தெய்வமான கருணை மாதாவை வணங்கி எதை கேட்டாலும் அது நிச்சயமாக நடக்கும் என வேண்டுதல் நிறைவேறும் பொழுது வெள்ளியால் செய்த எலி உருவத்தை காணிக்கையாக கொடுப்பது நடைமுறையில் உள்ளது. இது மட்டுமல்லாமல் கோவிலில் அங்குமிங்கும் ஒடும் எலிகளில் வெள்ளை எலியை பார்த்து விட்டால் மிகவும் அதிர்ஷ்டம் என்பது முக்கியமான அம்சம்.

இதே போல, அணுகுண்டு சோதனை நடந்த போக்ரானுக்கு அருகில் 6 கி.மீ., தொலைவில் மிகவும் பிரசித்தி பெற்ற ராம்தேவ்ரா என்ற பாபா கோவில் அமைந்துள்ளது. போக்ரான் அணுகுண்டு சோதனை நிகழ்த்தப்பட்ட பொழுது சோதனையின் காரணமாக இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சிறு பாதிப்பு கூட ஏற்படாமல் இருந்ததற்கு பாபா ராம்தேவ்ராவின் சக்தி தான் காரணம் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களிடையே மிக பலமாக ஏற்பட்டது.

இக்கோவில் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் ஏராளம். ஒரு குழுவில் சிறு குழந்தைகளும் அடக்கம் என்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்.

ராஜஸ்தான் என்றாலே நம் எல்லாருக்கும் பாலைவனம் தான் நினைவிற்கு வரும். இங்கு, பாலைவனம் என்பது ஒரு பகுதி தான். பாலைவனத்தை ரசிக்க செல்ல வேண்டிய இடம் ஜெய்சால்மர் தான். ஜெய்சால்மரில் இருந்து 30 கி.மீ., தூரம் சென்றால் பாலைவனம் ஒட்டிய குறி என்ற இடம் வரும். நம்மூர் கொடைக்கானல், ஊட்டி குதிரை சவாரி போல இங்கு ஒட்டக சவாரி செய்யலாம். உல்லாச கேளிக்கைகளுக்கு இங்கு பஞ்சமில்லை.

குடிநீர் பற்றாக்குறை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் அதிகம். இதன் காரணமாக இம்மாநிலத்தில் இந்திரா காந்தி கால்வாய் என்ற செயற்கை கால்வாய் 500 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சட்லெஜ் நதியிலிருந்து இந்த கால்வாய்க்கு தண்ணீர் வருகிறது.

ஆண்டு முழுவதும் இந்த கால்வாயில் தண்ணீர் வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கும். இத்தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு இம்மாநில மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானேர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் ஒட்டக திருவிழா பிரபலமானது. ஆசியாவிலேயே ஒட்டக பண்ணை உள்ள மாநிலமும் ராஜஸ்தான் தான். பிக்கானேர் அருகே 20 கி.மீ., தூரத்தில் இந்த ஒட்டக பண்ணை அமைந்துள்ளது. பாலைவன கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்களை அலங்கரித்து ஆட விடுவது, ஓட்டபந்தயம் என நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஒட்டகத் திருவிழா போல, ஜெய்ப்பூரில் ஆண்டுதோறும் யானைகளுக்கான திருவிழாவும் நடைபெறும். இந்த திருவிழாவின் போது யானைகளை அலங்கரித்து, அது நடந்து வரும் அழகை பார்க்கும் போதும், யானைகளுக்கான ஓட்ட பந்தயம் நடக்கும் போதும் மீண்டும், மீண்டும் பார்க்கத் தூண்டும்.

ராஜஸ்தானில் சுற்றுலா செல்ல ஏற்ற மாதங்கள் செப்டம்பர், அக்டோபர், நவம்பர். ஏனென்றால், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் இங்கு அதிகபட்ச வெப்பநிலையும், டிசம்பர், ஜனவரி அதிகபட்ச குளிரும் (மைனஸ் டிகிரியும்) காணப்படும். பெண்களுக்கான ஆடை, அலங்கார ஆபரணங்களின் சொர்க்கம் என்றால் அது ஜெய்ப்பூர் தான். கழுத்து, காது, மூக்குக்கு என அலங்கார நகைகள் குறைந்த விலையில் கொட்டி கிடக்கின்றது. அது மட்டுமல்லாமல், வண்ணமயமான, வித, விதமான புடவை ரகங்களும் இங்கு ஏராளம்.

ராஜஸ்தான் மாநில மக்களின் உணவு முறை யில் முக்கிய இடம் பெறுவது எண்ணெய் இல்லாத கோதுமை சப்பாத்தி. எந்த ஹோட்டலுக்குள், எந்த நேரத்தில் சென்றாலும் சப்பாத்தி, வெங்காயம், பாலக் (கீரை வகைகள்), இனிப்பு தவறா மல் இடம் பெறும். இது தவிர, அசைவ வகைகளில் சிக்கன், மட்டன் தடையில்லாமல் கிடைக்கும். மீன் வகைகள் கிடைப்பது அரிது.

இந்தியாவிலேயே இனிப்பு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் ராஜஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இனிப்பு வகைகளில் மிக பிரசித்தி பெற்றது ரசகுல்லா. இம்மாநில மக்களிடையே காலையில் வெறும் வயிற்றில் டிபனுக்கு பதிலாக இனிப்பு (லட்டு போன்ற) சாப்பிடும் பழக்கம் அதிகம். ஹோட்டலில் உணவு வகைகளின் விலை சராசரியாகத் தான் இருக்கும்.

ராஜஸ்தான் சுற்றுலா செல்லும் நம்மூர் உ.பா., பிரியர்களுக்கு ஒரு கசப்பான செய்தி. இம்மாநிலத்தில் பிராந்தி கிடைப்பது மிக, மிக அரிது. பயந்து விடாதீர்கள். ஏனென்றால், பீர், ரம், விஸ்கி போன்ற பிற வகைகள் கிடைக்கும்.

தமிழகத்தில் இருந்து ராஜஸ்தான் சுற்றுலா செல்ல மிக குறைந்த செலவில் கன்னியாகுமரியில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் பிக்கானேர் வரையிலும், அதிக செலவில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்தும் இயக்கப்ப டுகின்றன. சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் செல்ல விமான வசதி உள்ளது. ராஜஸ்தான் மாநில சுற்றுலா தளங்களை முழுமையாக கண்டுகளிக்க அதிகபட்சமாக 10 நாட்கள் போதும்.

 
 
BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in