02.அன்னபூரணி லட்டு சப்பர
ரகசியம் (தி. செல்லப்பா)
தீபாவளியன்று காசியில் அன்னபூரணி லட்டு சப்பரத்தில்
பவனி வருவாள். இதன் ரகசியம் என்ன தெரியுமா?
இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்து
விடலாம் என்று மார்தட்டுகிறார்கள் சிலர். இவர்களை
தொழிற்சாலை கட்டச்சொன்னால் கட்டி விடுவார்கள்.
எவ்வளவு நுட்பமான அறிவியல் சாதனத்தை உருவாக்கச்
சொன்னாலும் உருவாக்கி விடுவார்கள். அணைகளை
கட்டுவார்கள். ஆனால், வயலில் இறங்கி விதையை ஊன்றி
விட்டு வெளியேறிதும், வானத்தை அண்ணாந்து
பார்ப்பார்கள். மழை பெய்யுமா பெய்யாதா? போட்ட விதை
முளைக்குமா? முளைக்காதா? என்பது இவர்களுக்கு
தெரியாது. ஏனெனில், அது தெய்வத்தின் கையில்
இருக்கிறது.
இந்த தெய்வத்திற்கு தான் நாம் "அன்னபூரணி' என பெயர்
வைத்திருக்கிறோம். அவளது சிலையை அரிசி பரப்பிய ஒரு
சிறு தட்டில் வைத்து, ""தாயே! அம்மா, எங்கள்
இல்லத்தில் உணவுக்கு பிரச்னை வராமல் அருள்புரி தாயே,''
என்கிறோம்.அன்னபூர்ணாஷ்டகம் என்ற நூலில்,
ஆதிசங்கரர்,
""பிக்ஷõம் தேஹி க்ருபாவலம்பனகரீ
மாதா அன்னபூர்ணேச்வரீ!'' என்கிறார். |
|
"கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணியே! பிச்சை
போடு' என்பது இதன் பொருள்.
ஆம்...இந்த உணவுப்பிச்சையை அவள் மட்டுமே தர
முடியும். வேறு யாராலும் இந்த சாதனையைச் செய்ய
முடியாது.
கடைசி ஸ்லோகத்தில்,
""மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா: சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம்''
என அவர் சொல்கிறார். உணவை குழந்தை யாரிடம் கேட்கும்?
முதலில் அம்மா, அம்மா ஊரில் இல்லாவிட்டால் ஓட்டலில்
போய் வாங்கிக்கொடு என அப்பாவிடம் கேட்கும்.
ஆதிசங்கரரும் இப்படியே தான் இந்த ஸ்லோகத்தின் மூலம்
அன்னபூரணியிடம் கேட்டார். "எனக்கு பார்வதியே அம்மா,
பரமேஸ்வரனே அப்பா, சிவபக்தர்கள் எல்லாம் என்
உறவினர்கள், மூவுலகமும் எனது வீடு' என்கிறார்.
கடவுளிடம் உணவைக் கேட்டாலும் சரி, ஞானத்தைக்
கேட்டாலும் சரி...எல்லாருக்கும் அது கிடைக்க
வேண்டும் என்ற பொதுநோக்கம் இருக்க வேண்டும்.
"சிவபக்தர்கள் என் உறவினர்கள், மூவுலகமும் எனது
வீடு' என்று அன்னபூரணியிடம் சொன்னதன் மூலம்,
அவர்களுக்கும் சேர்த்து உணவையும், ஞானத்தையும் கொடு
என்றே இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு
மனிதனின் மனநிலையும் இப்படி மாறியாக வேண்டும் என
ஆதிசங்கரர் விரும்புகிறார்.
அன்னபூரணி தன் கையில் பாத்திரம் ஒன்றை
வைத்திருக்கிறாள். இதில் பால்சோறு இருக்கும். பால்
சோறு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிரியம். உலக
ஜீவன்கள் அனைத்தும் அவளது குழந்தைகள் தான். எனவே,
அவள் எல்லாருக்கும் தாராளமாக உணவளிக்கிறாள்.
மற்றொரு கையில் வாரிக்கொடுக்க கரண்டி இருக்கிறது.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், அள்ள அள்ளக்குறையாத
அவளுடைய பால்சோற்று பாத்திரம், ஞானத்தைக்
குறிப்பதாக இருக்கிறது. ஞானம் என்றால், உலக
ஆசைகளைத் துறந்து இறைவனை அடைதல் என்பதாகும். இதை
நமக்கு தருபவளும் அன்னபூரணியே. அவள் நம் உடலுக்கு
மட்டுமின்றி, ஆத்மா வுக்கும் உணவிடுபவளாக
இருக்கிறாள்.
காசியில் அன்னபூரணியை தீபாவளியன்று லட்டு
சப்பரத்தில் தரிசிக்கலாம். உலகுக்கு உணவளிக்கும்
அந்த அன்னை, தீபாவளியன்று ஸ்பெஷலாக பக்தர்களுக்கு
ஏதேனும் தர வேண்டாமா? இதற்காகத்தான் லட்டு
சப்பரத்தில் பவனி வந்து, லட்டை பிரசாதமாகத்
தருகிறாள். அன்னபூரணியைப் போன்ற கருணை மிக்க
தெய்வம் இந்த உலகில் யாருமில்லை என்பதற்கு மற்றொரு
உதாரணத்தையும் சொல்லலாம்.
கேரளாவில் செருக்குன்னம் என்ற ஊர் இருக்கிறது.
இங்குள்ள அன்னபூரணி கோயிலில், தினமும் பக்தர்
களுக்கு சாப்பாடு போடுவார்கள். வருகின்ற
எல்லாருக்கும் அறுசுவை உணவு கிடைக்கும்.
பக்தர்களுக்கு மட்டுமல்ல, பாவிகளுக்கும் இங்கு உணவு
உண்டு என்பது தான் மற்றொரு விசேஷம். இரவு வேளையில்
கோயில் அருகிலுள்ள மரத்தில், ஒரு சோற்று மூடையைக்
கட்டி வைத்து விடுவார்கள். இரவில் திருடர்களும்,
சமூக விரோதிகளும் நடமாடினால், அவர்களும் கூட
சாப்பிட்டு விட்டு போகட்டுமே என்பதற்கு இப்படி ஒரு
ஏற்பாடு.
இப்படி திருடர்களுக்கும் அருளுகிற இந்த அன்னையை
நாம் வணங்காததன் விளைவைத் தான் இன்று அனுபவித்துக்
கொண்டிருக்கிறோம். எந்த ஒரு தேசத்தில்,
இறைபக்திக்கு களங்கம் கற்பிக்கப்படுகிறதோ அந்த
தேசத்தில் மழை பெய்வதில்லை. அங்கே அதர்மம்
தாண்டவமாடும். அதர்மம் இருக்கும் இடத்தில் தேவர்கள்
தங்கள் பார்வையைச் செலுத்துவதில்லை. மழை பெய்தாலும்
சேதத்தை உண்டாக்கி பயிர் பச்சைகளை அழிப்பதுடன்,
நோய்க்கிருமிகளை பரப்பிவிடும். அன்னபூரணியை வணங்கி,
நல்லதை மட்டுமே மனதில் எண்ணி நடந்து கொண்டால்,
உலகில் பஞ்சத்திற்கு இடமில்லை.
|