14.அம்புலுவின் சேவை! (
அனுராதா ரமணன்)
இனிமேல் பெண் குலத்துக்காக சேவை செய்வது எனத்
தீர்மானித்து விட்டாள் அம்புலு. இதை அவள், தன்
கணவன் சீனுவிடம் தெரிவித்தபோது, ஆனந்தமாய், "பேஷ்...
பேஷ்' எனத் தலையாட்டினான்.
""சேவையில என்ன பெண் குலத்துக்கென்று தனி...
ஆம்பிளைகளுக்குப் பிடிக்காதா. அதுவும்,
திருநெல்வேலிக்காரங்க ஸ்டைல்லே, புழுங்கலரிசி சேவை
செஞ்சு, மோர் குழம்பும் வச்சுட்டேயின்னு வச்சுக்க...
சும்மா, சூப்பராப் பிய்ச்சிட்டுப் போகும்.''
"ணக்'கெனப் புருஷன் நெற்றியில் இடித்தாள் அம்புலு...
""சாப்பாட்டைத் தவிர, வேற ஒண்ணுமே தோணாதா
உங்களுக்கு? இது திங்கற சேவையில்லே. பெண்
குலத்துக்கு சர்வீஸ் செய்யப் போறேன்.'' |
|
சீனுவுக்கு ஏற்கனவே கோலிகுண்டுக் கண்கள். போதாக்
குறைக்கு சோடாபுட்டி கண்ணாடி. அவன் விழிகள்
தெறித்து விழுவது போல மனைவியைப் பார்த்தான். சும்மா
சொல்லக் கூடாது... அம்புலுவை அவன் பதி சேவை செய்யக்
கூட அனுமதித்ததில்லை. ஏற்கனவே அவள் சற்று பருமனோடு
சேர்த்தி தான். வீட்டில், துணி துவைக்க, பாத்திரம்
துலக்க, வீடு பெருக்க ஒரு ஆயாவைப் போட்டிருக்கிறான்.
காய் நறுக்குவது, முக்கால்வாசி சமையலை செய்வது
அத்தனையும் சீனுவின் தாய் கவனித்துக் கொள்கிறாள்.
அப்படியே அவனது அம்மா, சீனுவின் தங்கை மீனு
வீட்டுக்குப் போனால் கூட, அவசரத்துக்குப் பாவமில்லை
என்று சீனுவே வரிந்து கட்டிக் கொண்டு சமையலில்
இறங்கியிருக்கிறான்...
இதில் அம்புலுவுக்கு சேவை செய்ய வேண்டுமாமே...
அப்படி என்ன அவசியம்?
அவளை கவலையுடன் அவன் பார்க்க, அவளோ - எண்ணெயில்
பொரியும் வெங்காய பஜ்ஜி போலக் குதித்தாள்...
""உங்க அம்மாவுக்கு மீனு என்ன சொன்னாலும் ஒசத்தி.
மீனு, டில்லியில -"டிவி' புரோகிராம்லே உள்ளூர்
பெயிண்டிங் எக்ஸிபிஷன் நடத்தறா; இந்தியில கவிதை
எழுதறா. இப்ப ஏதோ மஹிளா மண்டலியில தலைவியா
இருக்காளாமா. எல்லாம் பொம்மனாட்டிகளையும் கூட்டி
வச்சிட்டு, சோனியா காந்தியோடச் சேர்ந்து போட்டோ
எடுத்துக்கப் போறாளாம்.
""ஒரு வாரமா தொண, தொணன்னு "டில்லிக்கு டிக்கெட் எடு,
நான் போய் மீனுவுக்கு ஒத்தாசையா இருக்கணும்...'ன்னு
ஒரே புலம்பல்...''
""அம்மா போகணும்ன்னா போகட்டுமே அம்புலூ... உனக்குத்
தான் நான் இருக்கேனே.''
தன் கோலி குண்டு விழிகளில் காதலை நிரப்பி,
மனைவியைப் பார்த்தான் சீனு...
""இதுக்காக நீ எதுக்கு சேவை, இடியாப்பம்ன்னு
கிளம்பறே. மீனு, டில்லியில ஐ.ஏ.எஸ்., ஆபீஸ்
பெண்டாட்டி. வீட்டுல பதினஞ்சு, இருபது
வேலைக்காரங்க, தோட்டக்காரங்க, டிரைவர்ன்னு
இருக்காங்க. அத னால, பொழுது போகாம, ஏதோ உருட்டிட்டு
இருக்கா. நீ அப்படியில்லையே.''
அவளை சமாதானப்படுத்துவதாக நினைத்து, எக்குதப்பாக
ஏதோ பேசப் போக, அம்புலுவுக்கு, "விறு விறு'வென சாமி
ஏறத் துவங்கி விட்டது...
""அப்ப நான், உங்க தங்கை மீனுவை மாதிரி ஆபீசர் -
அதுவும் ஐ.ஏ.எஸ்., ஆபீசர் பெண்டாட்டி இல்லே. எனக்கு
அடுப்பங்கரையும், உங்க பிள்ளைக்கும், உங்களுக்கும்
சமைச்சுப் போடறதும் தான் வேலைங்கறீங்களா. உங்க
அம்மாவுக்கும் சரி; உங்களுக்கும் சரி... நான்னா
எப்பவுமே மட்டம் தான். விக், விக்...''
""அம்புலூ... ஊ... ஊ...''
பதறி விட்டான் சீனு... மனைவி அழுவதைக் கண்டு,
அதனால் ஏற்பட்ட பதற்றமில்லை. அம்புலு அழ
ஆரம்பித்தால் சுலபத்தில் நிறுத்த மாட்டாள்.
பெரிசாய் ஒரு செலவு வைத்து விட்டுத் தான் ஓய்வாள்.
அதுவும், மீனு எதைச் செய்தாலும், இவளுக்கு
உச்சந்தலையில் மிளகாயை அரைத்துத் தடவினாள் போல.
அவளும் சும்மாயிருக்க மாட்டாள். மெனக்கெட்டு தான்
செய்கிற சேவையைப் பற்றி - அம்மாவிடம் சொல்வது போல
- அண்ணன் பெண்டாட்டியின் காதில் போட்டால் தான்
திருப்தியடைவாள்.
""பெண் இனத்துக்கு சேவையின்னா... எந்த மாதிரி சேவை''
மனைவியின் ஆவேசத்தைத் தணிக்க, கூலாக ஒரு கிரேப்
ஜூஸ் கலந்து கொண்டு வந்து, கொடுத்தபடியே
புன்சிரிப்புடன் கேட்டான் சீனு. மனைவியின்
மனசுக்கேற்ற மருந்து அவனுக்கு இந்தப் பத்து
வருடத்தில் பழக்கம் தானே...
""அது... அப்படி கேளுங்க... முதல்லே - எல்லாப்
பெண்களும் ஏன் சிரிக்கவே மாட்டேங்கறாங்கன்னு யோசனை
பண்ணினேன். அத்தனைப் பேருக்கும் பல்லுலே ஏதேதோ
பிரச்னை இருக்கறது தெரிய வந்தது. பாவம், பல
பெண்களுக்கு வீட்டுல டூத் பேஸ்ட் கூட
கிடைக்கறதில்லேயின்னு என், "சர்வே'யிலத் தெரிய
வந்தது.''
""பல்பொடி உபயோகிப்பாங்களாயிருக்கும்.''
""அதுவும் இல்லே. ஆம்பிளைங்க மட்டும் வேலைக்குப்
போற வீடுகள்லே - ஆபீசுக்குக் கிளம்பறதுக்குள்ளே
சமையல் ஆகாதுன்னு நிச்சயமாத் தெரிஞ்சிட்டு,
பேஸ்ட்டை முழுங்கிட்டுப் போயிடறாங்க. குழந்தைங்க
தினமும் அரை டியூப் பேஸ்ட்டைத் திங்குதுங்க - பாவம்,
நம்மாலே வேற எதுக்கு வீண் செலவுன்னு, குடும்பப்
பெண்கள் பேஸ்ட், பல்பொடி பக்கமே போறதில்லை.
""புருஷன் - பெண்டாட்டி ரெண்டு பேரும் ஆபீசுக்குப்
போறவங்களா இருந்தா - ஒரு பேஸ்ட்டுக்கு ரெண்டு
பேரும் குடுமிப்பிடி சண்டையாம். இப்பத்தான் ஒரு
பெண், தன் சோகக் கதையைச் சொல்லி, "ஹோ'ன்னு அழுதா...''
நீளமாய் பெருமூச்சு விட்டாள் அம்புலு.
உலக மகாக் கவலையுடன் கேட்டான் சீனு...
""அய்யோ, அம்புலூ... அத்தனைப் பெண்களுக்கும் நம்ம
செலவுல டூத் பேஸ்ட் வாங்கித் தரப் போறியா...''
""போதுமே, அப்படியெல்லாம் யோசிக்காம செலவு வைப்பேனா
நான்! மேலும், நாம வாங்கித் தர்ற பேஸ்ட்டுகளையுமே
- கொடுமைக்காரக் கணவர்கள் தின்னு தீர்த்துட
மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?''
ஆண் இனத்தின் மீதே சுமத்தப்பட்ட பழியை நீக்கும் வழி
தெரியாது, தலை குனிந்தான்.
""உங்க அம்மா அடிக்கடி ஒரு பழமொழி சொல்வாளே...
ஞாபகமிருக்கா?''
""என்னது, அம்மாவுக்கு பழமொழியின்னா பஞ்சாமிருதம்
சாப்பிடற மாதிரி...''
""ஆனாலும், என்னைக் குத்திக் காட்டற மாதிரி இந்தப்
பழமொழிய அடிக்கடி சொல்வார். ஒரு வேலையின்னு செய்யப்
போனா - ஒரே சமயத்துல ரெண்டு வேலைய முடிச்சிட்டு
வரணும்ன்னு. அந்த அர்த்தத்துல, "மாட்டுக்குப்
புல்லு வெட்டின மாதிரியும் இருக்கணும்; மச்சானுக்கு
பொண்ணு பார்த்தா மாதிரியும் இருக்கணும்'ன்னு.
அந்தப் பழமொழிய அப்படியே உங்க அம்மா பக்கமே
திருப்பப் போறேன்.''
""அதா...வது...?''
கிலியுடன் இழுத்தான் சீனு.
""உங்க தங்கையை மிஞ்சற மாதிரி பெண்களுக்கு சேவை
செய்யப் போறேன்; அதே சமயத்துல, உங்க தங்கை, அம்மா
- எல்லாரோட பீத்தம் பெருமைக்கும் பெரிய வேட்டு
வைக்கப் போறேன்.''
""அம்புலூ... அம்பு கண்ணு - நீ என்ன செய்யப் போறியோ...
அதை, என்கிட்ட மட்டுமாவது சொல்லிட்டு செய்டா.''
சீனு, மனைவியின் முன் மண்டியிடாதக் குறை.
""நீங்க நல்ல பேரு வாங்கிக்கணும்ன்னு மெனக்கெட்டு
உங்கம்மா கிட்டப் போய் சொல்லிடுவீங்க.''
""சீச்சீ...''
""நம்ம குழந்தை பப்புலு மேல சத்யமான்னு - அவன் தலை
மேல அடிச்சு சத்தியம் செஞ்சுத் தாங்க.''
பப்பு - அவர்களின் எட்டு வயசு செல்லக் குமாரன், ஒரு
பக்கம் கம்ப்யூட்டர் கேம் விளையாடிக் கொண்டே,
இன்னொரு பக்கம் வெஜிடபிள் ரோலைக் கடித்துக் குதறிக்
கொண்டு உட்கார்ந்திருந்தான்..
""பாவம் குழந்தை, அவன் தலை மேலா?''
யோசிக்க விடவில்லை அம்புலு.
கணவன், தன் மகன் மீது சத்தியம் செய்த பின் -
அவனதுக் காதுக்குள் லட்சுமி வெடியைச் செருகி,
திரியில் நெருப்பை வைத்தாற்போல அந்தச் செய்தியைக்
கூறினாள்; "ஆ'வென அதிர்ந்தான் அவன்.
திருமணமாகாத இளம், முதிர், கன்னிகளுக்கெல்லாம்
மாப்பிள்ளைத் தேடித் தருகிற வேலையை, ஒரு நயா பைசா
வாங்காமல் செய்யப் போகிறாள் அம்புலு.
செய்யட்டுமே... எவனோ ஒரு ஆண் பிள்ளை அறியாமல் வந்து
இல்லறச் சிறையில் மாட்டிக் கொண்டால் அதற்கு யார்
பொறுப்பு?
அது எப்படி மீனுவைப் பாதிக்கும் என்கிறீர்களா?
அதில் விஷயமிருக்கிறது-
கில்லாடி நம் அம்புலு...
அவள் முதன் முதலாக வரன் தேடித் தரப் போவது
விசாலாட்சி காமாட்சி என்கிற பெண்ணுக்கு.
""அதென்ன விசாலாட்சி காமாட்சி. மீனாட்சியை மட்டும்
விட்டுட்டீங்க. ஒரே பொண்ணுக்கு, மூணு பேர் பெயரை
வச்ச மாதிரி யாருமில்லே. மாட்டுக்குப் புல்லு
வெட்டின மாதிரியும் ஆச்சு; மச்சானுக்கு...''
அம்புலு சொல்லி முடிக்கவில்லை. பெண்ணின் தாயார்,
பச்சைப் பாகற்காயைக் கடித்தது போல முகத்தை வைத்துக்
கொண்டாள்.
""அந்தப் பழமொழியையே சொல்லாதீங்க. என் உடம்பு
அப்படியே நடுங்குது.''
""ஏன், ஏன், ஏன்?''
வசந்த மாளிகை நடிகர் திலகம் கணக்கா அம்புலு, "ஏன்'களை
அடுக்க- வி.கா.,வின் தாயார், சிலிர்த்துக் கொண்டு
கூறினாள்...
""நீங்க சொன்ன மாதிரி, என் பொண்ணுக்கு விசாலாட்சி
காமாட்சி மீனாட்சியின்னுதான் பேரு வச்சிருந்தேன்.
பதினஞ்சு வயசு வரைக்கும் ஆசையா மீனு, மீனுன்னு
நானும், அவ அப்பாவும் கூப்பிட்டுட்டு இருந்தோம்.''
இப்போது அம்புலு, தன் ஸ்தூல உடம்பைக் குலுக்கிக்
கொண்டாள்.
""என்னது... மீனுவா... அந்தப் பெயரையே சொல்லாதீங்க.''
""ஏன், ஏன், ஏன்?''
பெண்ணின் தாயார் ரீப்பீட்டினாள்.
""அது என் எதிரி பேரு.''
""அய்யோ உங்க எதிரி பேரும் மீனுவா? என்னோட பரம வைரி
பேரும் அதுவே.''
வி.கா.,வின் அம்மா இதற்குள், அழுது நனைந்த மேல்
புடவையைப் பிழிந்து, உதறிப் போட்டுக் கொண்டாள்.
""உங்க எதிரி எங்கே இருக்காப்பல?''
""டில்லியில.''
""அய்யோ, என் எதிரியும் அங்கே தான்.''
அதிகம் வளர்த்துவானேன். பேசப் பேச - அம்புலுவின்
நாத்தியான மீனு தான் - இதோ, எதிரில் நிற்கும்
கோதாவரிக்கு தம்பிப் பொண்டாட்டி!
கோதாவரி - அதுதான் வி.கா.,வின் தாயார். அதாவது,
அம்புலுவின் நாத்தனாருக்கு நாத்தனார்.
""பெண்ணுக்கு வயது முப்பது.''
""சரி.''
""ஆயில்ய நட்சத்திரம்.''
""மாத்திட்டாப் போச்சு.''
""என்ன அத்தனை சுலபமாச் சொல்றீங்க? ஆயில்ய
நட்சத்திரக்காரங்களோட மாமனார், மாமியார் ரெண்டு
பேரும் இருந்தா ஒருத்தருக்கு ஆகாதாமே!''
""அதெல்லாம் ச்ச்ச்சும்மா. நம்பாதீங்க. ஆயில்ய
நட்சத்திரம்னா புருஷன்- பெண்டாட்டிக்குள்ள ஒரு
பிரச்னையும் இல்லையே... அவ்வளவு தான். மாமனார்,
மாமியார், பெரிய மாமனார் - இப்படியெல்லாம்
பார்த்துட்டே போகக் கூடாது.''
""போனாங்களே... இப்ப உண்மைய சொல்றதுக்கு என்ன...
என் தம்பி - அதான், உங்க நாத்தியைக் கட்டி
இருக்கானே... அவனுக்கே என் பொண்ணைக் கல்யாணம்
செஞ்சு வைக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்.
""ஐ.ஏ.எஸ்., மாப்பிள்ளை. நம்ப அம்மா, அப்பா
நமக்காக இதைச் செய்வாங்கன்னு எதிர்பார்த்தேன்.
செய்யலையே. இந்த நட்சத்திரத்தைக் காரணம் காட்டித்
தானே வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க! கடைசியில என்ன
ஆச்சு. உங்க நாத்தி எங்க வீட்டு மருமகளா வந்த மூணு
மாசத்துல எங்கம்மா விக்... விக்...'
""அதான். அதே தான். நான் இந்த நட்சத்திரத்தை
கொஞ்சம் முன்னேயோ, பின்னேயோ மாத்திடறேன்.''
""முடியுமா?''
""முடியுமாவது - ஜாகத்தையே மாத்திருவேன். என்னைப்
பற்றி உங்களுக்குத் தெரியாது. ஆமா, நம்ம விசாலாட்சி
காமாட்சி என்ன படிச்சிருக்கா?''
""பி.எஸ்ஸி., பத்து நாள் காலேஜுக்குப் போனா...
அங்கே கேன்டீன் நல்லாவே இல்லேயின்னு போக
மாட்டேன்னுட்டா.''
அந்தப் பெண்ணைப் பார்த்தாள் அம்புலு. அது, "கழுக்
மொழுக்'கென அமுல் பேபி மாதிரி இருந்தது.
ஜாதகம், படிப்பு, குண்டு உடம்பு, மூன்றையும் சரி
பண்ண வேண்டுமா...
""இது பத்தி, உங்க தம்பியோ, எதிரியோ என்ன
சொல்றாங்க?''
""ஜாதகம் பத்திக்கூட கவலையில்லே. படிப்பு, குண்டு...
அதைத் தான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க
யோசிக்கிறாங்க. நல்ல வரன் வந்தாச் சொல்லு.
கல்யாணத்தை நாங்களே எடுத்துப் போட்டுட்டுச்
செய்யறோம்னான் என் தம்பி. அவன் பெண்டாட்டி ஒண்ணும்
சொல்லலே.
""என் பொண்ணுக்கு நீ—ளமா ஒரு டயட் எழுதிக் கொடுத்தா.
அந்தக் கோணக் கையெழுத்தே என் மகளுக்குப் புரியலே.''
""சில அதிமேதாவிங்க இப்படித்தான் கோழி மாதிரி
கிறுக்குவாங்க. கல்யாணச் செலவுக்கு பணம் இருக்கு
இல்லே?''
கேட்ட கேள்விக்கு கோதாவரி - அசலான கோதாவரி குண்டு
வெங்கலப் பானை மாதிரி உட்கார்ந்திருந்தாள்.
""என்னம்மா, உங்க பட்ஜெட் எவ்வளவு?''
""பட்ஜெட் என்ன பெரீய்ய பட்ஜெட். என் தம்பி ஐ.ஏ.எஸ்.,
ஆபீசர். கேட்டா கொடுக்க மாட்டானா... எங்க
வீட்டுக்காரரோட நிலம் இருக்கு. போதல்லையின்னாத்தான்
தம்பீ.''
""ஆஹாங்.''
பதறி விட்டாள் அம்புலு. பின்னே என்ன. தான் இத்தனை
சிரமம் எடுத்து, இந்தக் குண்டுப் பெண்ணை
ஒல்லியாக்கி, ஜாதகத்தையே புதுசாய் எழுத வைத்து,
அண்ணா நகரில் ஒரு போலி யுனிவர்ஸிடி சர்டிபிகேட்
தருகிறவன் இருக்கிறான், அவனிடம் பேரம் பேசி ஒரு
பி.எஸ்ஸி., பாஸ் பண்ணினதாக சர்டிபிகேட் தயார் பண்ணி...
இத்தனை தகிடுதத்தங்களையும் செய்த பின் -
பற்றாக்குறைக்கு பணம் கொடுக்கும் சாக்கில் தன்
எதிரியும், அவள் புருஷனும் பெயரைத் தட்டிக் கொண்டு
போவதாவது.
""கூடாது... கூடவே கூடாது.''
அவள் தன்னை மறந்து கத்த, அரண்டு போய் விட்டாள்
கோதாவரி...
""என்னங்க, எதைக் கூடாதுங்கறீங்க?''
""ஹி... ஹ்... ஹி... ஒண்ணுமில்லே. நீங்க உங்க
பிரஸ்டீஜை விட்டுக் கொடுத்து, யார் கையையும்
எதிர்பார்க்க வேண்டாம். நான் பார்த்துக்கறேன்.''
கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டான் சீனு.
""அம்புலூ... இது விஷப்பரிட்சையோன்னு எனக்குத்
தோணறது...''
""நீங்க கொஞ்சம் சும்மாயிருங்க...''
அவள் சுறுசுறுப்பாய் வேலையில் இறங்கினாள்.
வி.கா.,வை அவள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள
நாற்பதே நாளில், 10 கிலோ எடை குறைப்பதற்கான
உடற்பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டாள்.
பழைய மாம்பலத்தில் ஒரு ஜோதிடர் - பிறக்காத
குழந்தைக்குக் கூட ஜாதகம் எழுதித் தருபவர் -
அவரிடம் சொல்லி, அவரை இந்திரன், சந்திரன் எனப்
புகழ்ந்து, புதுசாய் வரப் போகும் "டிவி' சேனல்
ஒன்றில் தினசரி பலன் சொல்ல, அவரை ஏற்பாடு
செய்வதாகவும் மானாவாரியாய் புளுகி...
அப்பொழுதும் மனிதர் பத்தாயிரம் ரூபாய் கையில்
வைத்தால் தான் என அடம் பிடிக்க - கோதாவரி, இது
கல்யாணக் கணக்கில் சம்பந்தமில்லை என்பது போல
விழிக்க - தானே அழுது...
"போனாப் போறது. ஒரு பொண் கல்யாணத்துக்கு உதவி
செய்யறோம். இதையெல்லாம் பொருட்டா நினைக்கக் கூடாது...'
- இப்படி அம்புலு, சீனுவை சமாதானம் செய்து, 40
நாட்களில் பத்து கிலோவை குறைத்துக் காட்டுவதாக
சபதம் எடுத்த, "ஜிம்' எல்லாம் விழி பிதுங்க, வி.கா.,
இன்னும் நாலைந்து கிலோ கூடி "ஜம்'மென்று இருந்தாள்.
""அதெப்படி ஜிம்லே சேர்ந்து உனக்கு வெயிட் ஏர்றது
இவளே?''
அழ மாட்டாதக் குறையாக அம்புலு கேட்க, தயக்கத்துடன்
சொன்னாள் கோதாவரி...
""பாவம், குழந்தை! அங்கே சாறு சக்கையாப்
பிழிஞ்சுடறாங்க போல... மத்தியானம் வீட்டுக்கு
வந்ததும் பசி, பசின்னு பறப்பா. நாளைக்கு
கல்யாணமாகிப் போற பொண்ணாச்சேயின்னு நான் தான்
காபியோட பஜ்ஜியோ, பக்கோடாவோ போட்டுத் தருவேன்..
ரொம்ப இல்லேம்மா. இதோ, இவ்வளவு தான்.''
கோதாவரி காட்டிய இவ்வளவில் 10 பேர் தாராளமாய்
சாப்பிடலாம்.
இதற்கு 45 ஆயிரம் ரூபாய் தண்டம்... இதுவும் கோதாவரி
கணக்கில் சேர்த்தி இல்லையாம்.
""நல்லாயிருக்கே. குழந்தையப் போட்டு, அடிச்சு,
பிசைஞ்சு, சப்பாத்தி மாவு பிசையற மாதிரி உருட்டி,
நாளைக்கு கல்யாணமாற குழந்தை... ஏதாவது ஒண்ணு
கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா, இவ அப்பாவுக்கு நான் என்ன
பதிலைச் சொல்லுவேன்...''
இந்த முறை, மனைவியின் முகம் போன போக்கை காணச்
சகியாமல், அவள் கேட்பதற்கு முன், சீனுவே பணத்தைக்
கொண்டு வந்து தந்தான்.
""அம்புலூ, போனஸ் பணம். அநேகமா தீபாவளிக்குக்
கட்டிக்க பழம் புடவைதான்னு நினைக்கிறேன்.''
""...ம்... அந்த அண்ணா நகர்லே டூப்ளிக்கேட் டிகிரி
சர்டிபிகேட் பி.எஸ்ஸி., 25 ஆயிரமாம். கோதாவரி
அதுக்கும் தரமாட்டான்னு தோணுது.''
""அடி அசடே... அவ, பொண்ணை தாரை வார்த்துக்
கொடுக்கக் கூட நயா பைசா தரப் போறதில்லே.''
சீனு கூற, அம்புலு அப்பொழுதே முனி பிடித்தாற்போல
ஆகி விட்டாள்.
கடைசியில் அப்படித்தான் ஆயிற்று.
அயனான வரன். பையன் எம்.எஸ்ஸி., வி.கா.வை விடவும்
திடகாத்திரன். அம்மாவும் அப்பாவும் தேனாய் பேசினர்.
40 பவுனு நகையும், ஒரு மோட்டார் சைக்கிளும்
கேட்டனர். பத்து பவுன் தாலிக்கொடியும், மூன்று
பவுனில் வளையலையும் தவிர ஒரு குந்துமணி கிடையாது
என்று கை விரித்து விட்டாள் கோதாவரி.
மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக, வெறும் சைக்கிள்
பரவாயில்லையா என்று, கோதாவரியின் கணவர்,
அப்பாவியாய் கேட்டார்.
""நாம தான் கார் வாங்கிட்டோம் இல்லே. உங்க மோட்டார்
சைக்கிள் சும்மாத் தானே இருக்கு. கொடுத்துடலாம்.''
""அது சரி. மிச்ச பவுன் கல்யாணச் செலவு...''
அம்புலு இடிந்து போய் உட்கார்ந்திருந்த அன்று இரவு,
வீட்டின் காலிங் பெல் ஒலிக்க —
அரக்க பரக்க எழுந்து போய் திறந்த சீனு. எதிரில்
கோதாவரியும், அவள் கணவரும் நிற்கக் கண்டு
திகைத்துப் போயினர்.
""என்ன சார் இந்த நேரத்துல?''
""நான் என்னத்தை சொல்வேன். எங்க விசாலாட்சி
காமாட்சியை மாப்பிள்ளை பையன் இழுத்துண்டு ஓடிட்டான்.''
""என்னது?''
""ஆமா. இந்த சனியன், அந்தப் பிள்ளையாண்டான் கிட்ட
சொல்லியிருக்கு. இந்த மாதிரி அத்தனை பவுன் போட்டு,
கல்யாணம் பண்ண எங்க அம்மா ஒத்துக்க மாட்டா.
இதுவரைக்கும் வந்த வரனெல்லாம் தட்டிப் போனதுக்கே
அம்மா தான் காரணம். நாம சொல்லாமக் கொள்ளாம
ஓடிடலாம்ன்னு.''
""ஓடிட்டாங்களா?''
""ஆமா. பையன் வீட்டுலப் போய் விசாரிச்சா, பையனுக்கு
படிப்பே இல்லையாம். அண்ணா நகர்லே தான் சர்டிபிகேட்
வாங்கினாங்களாம். நாம பொண்ணுக்கு போடற நகைய வச்சு
பையனுக்கு ஏதாவது பிசினஸ் வச்சுத் தரலாம்ன்னு. அவன்
அவசரப்பட்டுடான்னு பையனோட அப்பா குதிக்கிறார்.''
கோதாவரி, "பொல பொல'வென அழுதாள். அவள் புருஷனோ, ""என்
பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது. அவ மனசுல கல்யாண
ஆசையத் தூண்டி விட்டதே நீங்க தான்!'' என்று
அம்புலுவைப் பார்த்து இரைந்தார்.
ஓரக் கண்ணால் மனைவியைப் பார்த்தான் சீனு. ஒன்றரை
மாதமாய் இருந்த கவலையைக் காணோம்..
நல்ல வேளை, இந்த அளவுக்காவது மிச்சமானதே என்கிற
நிம்மதி...
மறுநாள் - டில்லியிலிருந்து மீனு, அண்ணாவுக்கு போன்
செய்து கூறினாள்:
""அண்ணா, என் நாத்தனார் பொண்ணு, படிப்புமில்லாம,
உடம்பும் ஊதி ஒண்ணு இருக்குமே. அது, ஒரு ஆளோட இங்கே
வந்து உட்கார்ந்து, இவனைத் தான் கட்டிப்பேன்
மாமான்னு ஒரே அழுகை. இவரைப் பற்றித் தான் உனக்குத்
தெரியுமே. அப்படியே உருகிட்டார். நாளைக்கு
ரிஜிஸ்தர் ஆபீஸ்லே வச்சு கல்யாணம். சின்னதா ஒரு
பார்ட்டி கொடுத்து, எங்க மகிளா மண்டலியில...''
அவள் பேசிக் கொண்டே போனாள். ஜாடையாய் அம்புலு எங்கே
இருக்கிறாள் எனப் பார்த்தான் சீனா. அவள் ஒரு கையில்
முறுக்கை வைத்துக் கடித்தபடி, மறுகையால் தினமலர்
தீபாவளி-மலரை உற்சாகத்துடன் புரட்டிக்
கொண்டிருந்தாள்.
"போகட்டும் இதைச் சொல்லி, அவள் மூடைக் கெடுப்பானேன்.'
மனைவியைப் பரிவுடன் பார்த்தான் சீனு. இதழ் கடையில்
புன்னகை அரும்பியது.
|