13.மனதைக் கவரும்
மகாபலேஷ்வர்! ( என்.செல்லதுரை)
மராட்டிய மாநிலத்தில் புனேவுக்கு அருகில் உள்ள
அருமையான, சிறிய, இயற்கை அழகுகள் கொட்டிக்
கிடக்கும் அற்புதமான சொர்க்கம் தான் மகாபலேஷ்வர்.
விடுமுறை ஓய்வு, உல்லாசச் சுற்றுலாவிற்கு ஏற்ற
அருமையான மலை வாசஸ்தலம் இது. அது மட்டுமல்ல,
புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு ஏற்ற தேனிலவுக்
கூடமாகவும் இது இருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 4,710 அடி உயரம் உள்ள இந்த
இடம், மும்பையில் இருந்து புனே வழியாக 290
கி.மீ.,லும் புனேயில் இருந்து 120 கி.மீ.,
தூரத்திலும் அமைந்துள்ளது. இங்குள்ள வெண்ணிலா
ஏரியில் பகலில் மட்டுமின்றி இரவில் நிலவொளியிலும்
படகு சவாரி செய்வது உற்சாகமான அனுபவம். |
|
|
|
இங்கு உள்ள
பல சிகரங்கள் ஆங்கிலேய அதிகாரிகளின்
பெயர்களிலேயே விளங்குகிறது. இங்கு 15
க்கும் மேல் உள்ள, "பாயின்ட்'கள்-முனைகளில்
இருந்து பார்த்தால் போதும், இயற்கையழகு
வித்தியாசமாகத் தோன்றி மனதைக் கொள்ளை
கொள்ளும். மிக உயரமான வில்சன் பாயின்ட்
விடியற்காலை சூரியோதயம் காணவும்,
பாம்பே பாயின்ட் சூரிய அஸ்தமனம்
காணவும் சிறப்பானவை.
ஆர்தர் சீட் என்ற இடத்தில் ஒரு
அகலப்பாறை தனியாக நீண்டு
கொண்டிருக்கும். அதைச் சுற்றி இரும்பு
கம்பி கட்டி பாதுகாப்பு
செய்திருக்கின்றனர். கீழே காடுகள்
நிறைந்த ஜோர் பள்ளத்தாக்கை குனிந்து
பார்த்தால் குலை நடுங்கும்.
இங்கு காகிதம், சிறு மரக்குச்சி,
கைக்குட்டை என எதை எறிந்தாலும் அது
கீழே போகாமல் பாராசூட் போல் பறப்பது
அதிசயம். |
ஜெனரல் லாட்விக்
பிரபு என்ற ஆங்கிலேயர் ஒரு கம்பை
ஊன்றிக் கொண்டு, தன் நாயுடன் முதன்
முதலில் மகாபலேஷ்வரைக் கண்டு பிடித்து
அதன் அழகில் மயங்கி இவ்விடத்தை ஒரு
சுற்றுலாத்தலமாக உருவாக்கியதால் அவர்
பெயரில் ஒரு பாயின்ட் உள்ளது.
இவ்விடத்தில் இருந்து கீழே தெரியும்
கிருஷ்ணா, கொய்னா பள்ளத்தாக்குகளுடன்
ஆங்காங்கு நரை முடி போல மலைகளில் ஓடி
வரும் லிங்கமாலா, தோபி, சைனாமேன் என்ற
பெயரில் உள்ள அருவிகள் வளைந்து,
நெளிந்து ஓடி வரும் அழகு கண்களைப்
பறிக்கும். இந்த ஊருக்கு பெயர் வரக்
காரணமான மகாபலேஷ்வர் கோவில் இங்குள்ளது.
முன்னொரு காலத்தில் மகாபலன், அதிபலன்
என்ற இரு அசுரர்கள் முனிவர்களையும்,
தேவர்களையும் துன்புறுத்த, தேவர்களின்
முறையீடு கேட்டு அந்த அசுரர்களை
அழித்தார் ஸ்ரீ மகாவிஷ்ணு. |
|
|
|
அச்சமயம்,
சிவபெருமானிடம் இந்த ஊரும், கோவிலும்
அவன் பெயரால் அழைக்கப்பட வேண்டுமென
மகாபாலன் வரம் பெற்றதாக வரலாறு. இந்த
ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தினடியில்
வருடம் முழுவதும் நீர் சுரந்து கொண்டே
இருப்பது இங்குள்ள சிறப்பு. இங்குள்ள
கிருஷ்ணா பாய் கோவிலில் ஒரு கோ
முகத்தில் இருந்து நீர் கொட்டிக்
கொண்டே இருக்கிறது. கிருஷ்ணா, கொய்னா,
வெண்ணா, சாவித்திரி, காயத்திரி என்ற
ஆறுகள் இம்மலையிலேயே உற்பத்தியாகின்றன.
இதன் பின்னணியாக ஒரு சுவையான கதை உண்டு.
இங்குள்ள பிரம்மாரண்யம் என்ற இடத்தில்
நான்முகன் ஒரு யாகம் செய்ய முடிவு
செய்து, நீர்த்தேவைக்கு வேதகங்கா என்ற
நதியை உற்பத்தி செய்தார். |
யாகம்
ஆரம்பிக்கும் நல்ல நேரம் நெருங்கிவிட,
முதல் மனைவி சாவித்திரி வர நேரமானது.
நேரம் தவறக் கூடாதென்ற எண்ணத்தில்
இளைய மனைவி காயத்ரியுடன் யாகம் துவங்கி
விட்டார். கோபமுற்ற சாவித்திரி,
நான்முகன் மற்றும் யாகத்துக்கு
வந்திருந்த சிவன், மகாவிஷ்ணு,
காயத்திரி அனைவரையும் நதியாகும்படி
சபித்து, தானும் நதியாக மாறி விட்டாள்.
மகாசவிஷ்ணு கிருஷ்ணா நதியாகவும்,
நான்முகனும், சிவனும் முறையே கொய்னா,
வெண்ணா நதிகளாகவும், சாவித்திரி,
சாவித்திரி நதியாகவும் மாறி விட்டனர்.
கண்ணுக்கு தெரியாமல் பூமிக்கடியில்
மறைந்து விட்டாள் காயத்ரி நதி.
முனிவர்கள் மற்றும் மக்களின்
பிரார்த்தனைகளுக்கு இணங்கி ஐந்து
நதிகளும் ஒரே இடத்திலிருந்து புறப்பட
ஆரம்பித்தனர். அந்த இடமே கிருஷ்ணா பாய்
கோவில் என்றும், பஞ்சகங்கா கோவில்
என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு பார்க்க வேண்டிய மிக
முக்கியமான இடங்களில் ஒன்று சத்ரபதி
சிவாஜியின் கோட்டையான பிராதாப்
காட்போர்ட். மகாபலேஷ்வரில் இருந்து 19
கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள
இவ்விடத்தில் தான் பீஜப்பூர் தளபதி
அப்சல்கானை தன் கைகளால் கொன்று
தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை
உருவாக்கினார் சிவாஜி. |
|
|
|
சிவாஜியால்
கட்டப்பட்ட ஸ்ரீபவானி அம்மன் கோவிலும்,
அப்சல்கானைக் கொன்று புதைத்த இடமும்
காணும் போது சிவாஜியின் காலத்திற்கே
நாம் சென்றுவிட்ட உணர்வு ஏற்படுகிறது.
மகாபலேஷ்வரை இந்தியாவின்
சுவிட்சர்லாந்து என்றும்
குறிப்பிடுகின்றனர்.
மும்பை மற்றும் மராட்டியத்தை
சேர்ந்தவர்கள் கோடையில்
மகாபலேஷ்வருக்கு ஒட்டு மொத்தமாக செல்ல
விரும்புவதால் அங்கு போக்குவரத்து
நெரிசல் ஏற்படுவதுடன் சுற்றுப்புற
சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. இந்த
நெருக்கடியில் இருந்து தப்பித்துக்
கொள்வதற்காக சுற்றுலாப் பயணிகள்
இப்போது தேர்ந்து எடுக்கும் இடம் தான்
பஞ்சகனி. மராட்டியத்தின் காஷ்மீர்
என்று அழைக்கப்படும் பஞ்சகனி அருகில்
உள்ள ரயில் நிலையம் வால்கர் என்றாலும்,
புனேயில் இறங்கிச் செல்வதும் வசதியானது.
புனேக்கு விமானத்தில் போய்
அங்கிருந்தும் போகலாம்.
ஏராளமான தங்கும் வசதிகள் கொண்ட
பஞ்சகனியில் சானடோரியங்கள் மட்டுமின்றி,
தங்கும் விடுதிகளும் இன்னமும் முத்திரை
பதித்து வருகின்றன.
|
ஐந்து மலைகளால்
சூழப்பட்டு 1334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள
பஞ்சகனியின் ஒரு பக்கம் கிருஷ்ணா ஆறு பாய்ந்து
செல்வதும், இன்னொரு பக்கம் அமைந்துள்ள
மரங்களின் பச்சை பசேல் என்ற காட்சியும் இதயத்தை
விட்டு அகலவே அகலாது. மகாபலேஷ்வரை விட இங்கு
மழை அதிகம்.
பஜாரில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள
பார்சி பாயின்டில் இருந்து மலைப்பாறைகள் ஊடே
சலசல என்ற ஓசையுடன் பாய்ந்து ஓடும் கிருஷ்ணா
நதியின் அழகை கண்டு ரசிப்பதுடன் உப்பங்கழி
நீரையும் பார்த்து மகிழலாம். சுற்றுலா பயணிகள்
அதிகாலையில் இந்த இடத்துக்கு சென்று அமர்ந்து
விடுகின்றனர். இதன் அருகே கட்டப்பட்டு உள்ள
பகோடா சிறுவர் பூங்காவும் பார்க்க வேண்டிய இடம்.
கிருஷ்ணா பள்ளத்தாக்குக்கு எதிரே மலை உச்சியில்
அமைந்துள்ள சிட்னி பாயின்ட் திரைப்படத்
துறையினரின் சொர்க்கம். பெரும்பாலான இந்தி படத்
தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புக்கு இந்த இடத்தை
தேர்ந்து எடுக்க தவறுவது இல்லை. விவசாய
விளைநிலங்களின் பசுமை காட்சிகளையும்
இங்கிருந்து கண் குளிர கண்டு களிக்கலாம்.
பஞ்சகனி நகரத்தின் கிழக்கு பக்கம் அமைந்துள்ள,
"டேபிள் லேண்ட்' டை பார்க்காமல் திரும்பி
விடாதீர்கள். அப்படி பார்க்காமல் விட்டால்
பஞ்சகனி சென்றதற்கே அர்த்தம் இல்லாமல்
போய்விடும். சிவப்பு கற்களாலான குன்று மீது 60
மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டேபிள் லேண்ட்
ஆசியாவில் இரண்டாவது பெரிய மலை பீடபூமி ஆகும்.
திரும்பும் வழியில் உள்ள ஒரு குகை, கலைக்
கூடமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு ஓய்வு
எடுத்து உணவருந்தி செல்ல ஹோட்டலும் உண்டு.
புனே செல்லும் வழியில் பஞ்சகனியில் இருந்து 14
கி.மீ., தூரத்தில் உள்ள தட்சிண காசி என்று
அழைக்கப்படும் வாயு கோவில், பக்தர்களை கவர்ந்து
இழுக்கத் தவறுவது இல்லை. பஞ்சகனி செல்லும்
சுற்றுலா பயணிகள் இந்த கோவிலில் வழிபட்டு
விட்டு தான் திரும்புகின்றனர். இங்கு பலவிதமான
கலையழகுடன் வடிவமைத்த கைத்தடிகள் மற்றும்
மென்மையான உலகத் தரம் வாய்ந்த செருப்புகளும்
பிரசித்தமானவை; மலிவாகவும் கிடைக்கும்.
ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி ஆகியவை மிக அதிகமாக
விளைவதால் அவற்றால் செய்யப்படும் ஜாம், ஜூஸ்,
ஜெல்லி போன்றவை அதிக அளவிலும், விலை
குறைவாகவும் கிடைக்கிறது.
பஞ்சகனியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள
டூம்டாம் என்ற இடமும், இயற்கை காட்சிகளுக்கும்
அமைதி தவழும் உப்பங்களிகளுக்கும் பெயர் பெற்ற
இடம். இங்கு ஓரு நாள் தங்கியிருந்து தண்ணீர்
விளையாட்டுகளை கண்டு களிப்பது மனதுக்கு இதம்
அளிக்கும். ஒரு குதிரையை வாடகைக்கு அமர்த்தி
சிறிது நேர பயணத்தில் பாண்டவர் குகைகளையும்,
கமல் காட் கோட்டையையும் அடைந்து விடலாம்.
புராண, வரலாற்று ரகசியங்கள் பலவற்றை தெரிந்து
கொள்ளலாம்.
அஜந்தா - எல்லோரா:
மராட்டிய மாநிலத்தில் உள்ள மற்றுமொரு
சுற்றுலாத் தலங்களில் காலத்தால் அழியாத வண்ண
ஓவியங்கள், கலைநயமிக்க சிற்பங்கள், குகைக்
கோவில்கள் நிறைந்த அஜந்தா-எல்லோரா
குறிப்பிடத்தக்கவை.
கி.மு., இரண்டாம் நூற்றாண்டில் புத்த
சாமியார்களால் அமைக்கப்பட்டதாக கருதப்படும்
இந்த குகைக் கோவில்கள் கி.பி., ஏழாம்
நூற்றாண்டு வரை சிறந்து விளங்கின. ஆனால், காலப்
போக்கில் இவை இடிந்தும், சிதறுண்டும் போனாலும்
19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேய
புதைபொருள் ஆராய்சியாளர் கண்ணில் படவே
புத்துயிர் பெற்றன.
சஹயாத்ரி மலையை குடைந்து இந்த குகைக் கோவில்கள்
அமைக்கப்பட்டு உள்ளன. அஜந்தாவில் மட்டும்
30க்கும் மேற்பட்ட குகைக் கோவில்கள் உள்ளன. இவை
அனைத்தும் புத்த மதம் மற்றும் தன் கோட்பாடுகள்,
வாழும் வழிமுறை போன்றவற்றை சித்தரிக்கின்றன.
மேலும், புத்த மதத்தினை தோற்றுவித்த
புத்தபிரானின் வாழ்க்கை மற்றும் போதனைகள்
ஆகியவற்றையும் சித்தரிக்கும் வண்ணம் உள்ளது.
குகையில் உள்ள அனைத்துச் சிற்பங்களும்
சுத்தியால், உளி கொண்டு கலையம்சமாகச் செதுக்கி
வைக்கப்பட்டுள்ளன. புத்த மதத்தின் தனித்தன்மை,
சைதன்யர்கள் மற்றும் விஹாராஸ் போன்றவர்களது
படிப்பு, கல்வித்திறன், இறைவழிபாடு, மத
நம்பிக்கை ஆகிய அனைத்தையும் ஒருங்கே விளக்கும்
வகையில் அமைந்து உள்ளன.
அஜந்தாவின் அனைத்து குகைக் கோவில்களும் ஜாடகா
வம்சத்தினரின் வாழ்க்கை நடைமுறைகளையும்,
அவர்களது கலை, கல்வி, நாகரிகம் போன்றவற்றை
விளக்கினாலும் குறிப்பாக, புத்த மதத்தின்
தலைவரான புத்தரைப் பற்றியதாகவும் உள்ளது.
புத்தரின் அரண்மனை, வாழ்க்கை முதல் பின்னர்
துறவறம் பூண்டு ஞானம் பெற்று, பேறு பெற்றது வரை
ஒவ்வொரு நிலையாக அறியும்படி சிற்ப
வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவை
அனைத்தும் கண்ணுக்கும், மனதிற்கும்
நிறைவளிக்கின்றன.
ஒரு குகையில் உள்ள பறக்கும் அப்ஸரா என்ற குதிரை,
இன்னொரு குகையில் நாகராஜன் தன் மனைவியுடன், தன்
வேலைக்காரியுடனும் உட்கார்ந்து இருக்கும் நிலை
ஆகியவை மிக, மிக அற்புதமாக உள்ளது. இவற்றை
கண்டு களிக்க ஆங்காங்கே பிரகாசமான ஒளி
ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சிற்சில
குகைகளில் இயற்கையான சூரிய ஒளியில் கண்டு
களிக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு
உள்ளன.
எல்லோரா குகைக் கோவில்கள் கி.பி., மூன்றாம்
நூற்றாண்டுக்கும், கி.பி., ஏழாம்
நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்
உண்டாக்கப்பட்டவை. இவை அக்காலத்திய இந்து மதம்,
புத்த மதம் மற்றும் ஜைன மதக் கோட்பாடுகள்,
கொள்கைகள், நெறிகள் மற்றும் வாழ்க்கை
முறையினங்கள், அவற்றினிடையே உள்ள ஒற்றுமையை
விளக்கும் சிற்பங்களாக அமைந்துள்ளது.
இங்குள்ளவற்றில் புத்தமதக் கோட்பாடுகளை தழுவிய
சிற்பங்களைக் கொண்ட, விஸ்வகர்மா குகை கோவில்,
இந்து மதக் கோட்பாடுகளைச் சித்தரிக்கும் மிகப்
பிரசித்தி பெற்ற கைலாசநாதர் குகை கோவில்
மற்றும் ஜைன மதக் கோட்பாடுகளை விளக்கும், "இந்திர
சபா' ஆகியவை மிக முக்கியமானவை. இவை அனைத்தும்
ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளன.
சிற்பக்கலைக்குச் சிகரம் வைத்தது போன்று
அமைக்கப்பட்டு இருப்பது கைலாசநாதர் குகைக்
கோவில். இந்தக் கோவில் சிற்பங்கள் அனைத்தும்
வெகு நேர்த்தியாக உள்ளன. இவை 100 ஆண்டு காலம்
பணிபுரிந்து பாடுபட்டு உருவாக்கப்பட்டது.
அங்குள்ள சிற்பங்கள் கண்ணுக்கும்,
கருத்துக்கும் விருந்தளிப்பதுடன் புராண
காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளையும்,
வரலாறுகளையும் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.
பழம்பெருமை மிக்க இந்த சிறப்பு வாய்ந்த அஜந்தா,
எல்லோரா சிற்பங்களைக் காண மும்பை நகரத்தில்
இருந்து பஸ், கார் மூலம் சாலை மார்க்கமாக
செல்லலாம் மற்றும் அவுரங்காபாத் நகருக்கு ரயில்,
பஸ் மற்றும் விமானம் மூலம் சென்று அங்கிருந்து
பஸ் மூலம் சாலை மார்க்கமாகவும் அஜந்தா, எல்லோரா
குகைக் கோவிலுக்குச் செல்லலாம். வருடம்
முழுவதும் அஜந்தா, எல்லோரா செல்லலாம் என்றாலும் கூட அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம்
வரையிலான காலத்தில் சம சீதோஷ்ண நிலை உடலுக்கு
மிகவும் ஏற்றவையாக இருப்பதால் அந்த சமயத்தில்
அங்கு சுற்றுலா செல்வது இதமான அனுபவத்தை தரும். |
|