Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

10. கங்கை பாகீரதி ஆனது எப்படி? ( பார்கவ் பரத்வாஜ்)



"கங்கா ஸ்னானம் ஆச்சா?' என்பது தீபாவளியன்று அடிக்கடி கேட்கப்படும் கேள்வி.

கங்கை துவங்குமிடமான கங்கோத்ரியில் தீபாவளியன்று குளித்தால் புண்ணியம் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே நிலவுகிறது. தவிர, கங்கோத்ரிக்கும், தீபாவளிக்கும் மற்றொரு முக்கிய தொடர்பும் உண்டு.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று கங்கோத்ரி ஆலயம் மூடப்படுகிறது. ஆம், ஆண்டு முழுவதும் இந்த ஆலயம் திறந்திருப்பதில்லை. மே மாதத்தில் அட்சய திருதியன்று திறக்கப்படும் அந்த ஆலயம் நவம்பர் மாதம் மூடப்படுகிறது.

புனித ஆலயங்களில் கங்கோத்ரிக்கு தனி இடம் உண்டு. புனித யாத்திரைக்கு உகந்த நான்கு தலங்களை, "சார் தாம்' என்பதுண்டு. அந்தத் தலங்களில் கங்கோத்ரிக்குத் தனியிடம் உண்டு. மற்ற மூன்று யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத்.

கங்கை துவங்கும் இடம் கோமுக் என்றாலும், பூஜை போன்ற சம்பிரதாய சடங்குகளுக்கு கோமுக்கிற்கு சற்று கீழே அமைந்துள்ள கங்கோத்ரிதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உயரமாக எழுப்பப்பட்டுள்ள இந்த ஆலயம் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தை நிறுவியவர் அமர்சிங் தாபா என்ற கூர்கா இனத்தளபதி. கங்கோத்ரி ஆலயம், கங்கையை வழிபடுவதற்காக எழுப்பப்பட்டது. சிவபெருமானின் திருவுருவமும் இங்கு உண்டு.

அருகில் சலசலத்து ஓடுகிறது பாகீரதி நதி. இந்நதி பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உண்டு.

சாகர் என்ற மன்னன் வீரம் மிக்கவன். தேவர்களையும், முனிவர்களையும் அச்சுறுத்தி வந்த அசுரர்களை அழித்தான் அந்த மன்னன். பிறகு, தன் உயர்வை அங்கீகரித்துக் கொள்ளும் வகையில் அஸ்வமேத யாகம் என்ற வேள்வியை நடத்தினான். இதுபோன்ற யாகத்தில், குதிரை ஒன்றை மன்னனின் பிரதிநிதி அழைத்துச் செல்வான். குதிரை அனுப்பிய மன்னனே தன்னை விட உயர்வானவன் என்று கருதும் பிறநாட்டு மன்னர்கள் அந்த குதிரைக்கு தலைவணங்கி மரியாதை செய்து அனுப்புவர்.


 

மன்னன் சாகருக்கு எண்ணற்ற பிள்ளைகள். அவர்கள் அனைவரும் தந்தையின் யாகக் குதிரையை அழைத்துக் கொண்டு பதினான்கு உலகங்களுக்கும் விஜயம் செய்தனர். தேவலோகத்துக்குச் சென்றபோது, அங்கு தேவேந்திரன், "இந்த குதிரைக்கு நாம் அடி பணிந்தால் என்னைவிட மன்னர் சாகர் அதிக சக்தி படைத்தவன் என்று நானே ஒத்துக் கொள்வதாகி விடும். நாளைக்கு என் பதவியையே அந்த மன்னன் பறித்து விடலாம். எனவே, இந்த அஸ்வமேதயாகம் நடைபெறக் கூடாது!' என்று யோசித்தான். இப்படி சிந்தித்த தேவேந்திரன் மன்னன் சாகரின் மகன்களையெல்லாம் கொன்று குவித்தான். விவரம் அறிந்த சாகர் துடித்தான், கதறினான். ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டான். எனினும், தன் மகன்கள் நற்கதி அடைய வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு மிக அதிகமாக இருந்தது.

இறைவனை வேண்டியதில் கங்கை நதி பூமியில் பாயும்போது தான் மன்னனின் இறந்த மகன்களின் ஆத்மாக்கள் சாந்தி அடையும் என்று அசரீரி ஒலித்தது. இது எப்படி சாத்தியம்?

"தாத்தா, நான் தவம் செய்து கங்கையை பூமிக்கு வரவழைக்கிறேன்...' என்று புறப்பட்டான் சாகரின் பேரனான பகீரதன் என்பவன். அவனது கடுமையான தவத்தின் பலனாக, அவன் வேண்டிய வரம் கிடைத்தது. முழு வேகத்துடன் கங்கை மேல் உலகிலிருந்து பூமியை நோக்கி வரத் துவங்கினாள்.

"இவ்வளவு வேகத்துடன் கங்கை பூமியில் வீழ்ந்தால், உலகிற்கு கடும் பாதிப்பு ஏற்படுமே...' யோசித்த சிவபெருமான், கங்கையை முதலில் தன் தலையில் தாங்கிக் கொண்டார். இதனால், கங்கை சற்று வேகம் அடங்கி பூமியில் பாயத் துவங்கினாள்.

பகீரதனின் கடும் முயற்சியால், பூமிக்கு வந்த காரணத்தினால் பாகீரதி என்று இங்கு அழைக்கப்படுகிறாள் கங்கை. பின்னர், தேவப் பிரயாகையிலிருந்து கங்கை என்று அழைக்கப்படுகிறாள். கங்கோத்ரியில் உள்ள ஆலயம் 20 அடி உயரம் கொண்டது.


 

அற்புதமான இயற்கை சூழல் அமைந்த அந்த இடத்தில் சிவலிங்கத்தையும், கங்காதேவியையும் வணங்கிப் பணிவது அற்புதமான ஓர் அனுபவம். நம் மனதில் தொக்கி நிற்கும் அற்பமான ஆசைகள் அங்கு தானாக விடைபெற்றுக் கொள்கின்றன.

நவம்பர் மாதத்தில் இந்த பகுதி முழுவதும் பணி சூழ்ந்து விடும். ஆலயத்தையும் பனிப்படலம் மூடி விடும். எனவே, தீபாவளி திருநாள் முடிந்தவுடன் இங்கு இருக்கும் கங்கை அம்மன் திரு உருவத்தை இங்கிருந்து 12 கி.மீ., கீழே உள்ள முக்பா என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் நிறுவுகின்றனர்.

அடுத்த மே மாதம் தான் முக்பா பகுதியைச் சேர்ந்த பூஜாரிகள் அம்மனின் சிலையை மீண்டும் கங்கோத்ரி ஆலயத்திற்கு எடுத்துச் செல்வர்.
கங்கோத்ரி பகுதியில் ஓடும் பாகீரதி நதிக்குள்ளே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. நீர் மட்டம் குறையும்போது இந்த லிங்கத்தை தரிசிக்கும் பேறு பக்தர்களுக்குக் கிடைக்கிறது.

உத்தர்கண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் இருக்கிறது கங்கோத்ரி. கந்த புராணத்தில் கேதார் ஷேத்ரம் என்று வர்ணிக்கப்படுவது இதுதான். இவ்வளவு உயரத்தில் அமைந்திருந்தாலும் ஆண்டுதோறும் இரண்டரை லட்சம் பேர் இங்கு கூடி ஈசனையும், கங்காதேவியையும் கண்டு மகிழ்கின்றனர்.

திபெத்திய எல்லைக்கருகே இந்த இடம் இருக்கிறது. மகாபாரதப் போருக்குப் பிறகு பாண்டவர்கள் இங்கு யாகம் செய்துள்ளனர்.

 

கங்கோத்ரியில் இயற்கை எழிலுக்குப் பஞ்சமே இல்லை. அழகிய பள்ளத்தாக்குகள், அற்புத வனங்கள், ட்ரெகிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சியையும் இங்கு செய்கின்றனர். ஆலயத்தின் மறுபுறத்தில் நிறைய ஆசிரமங்கள் உள்ளன. மொத்தத்தில் அமைதி அளிக்கும் சூழல் இங்கு நிலவுகிறது.

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in