ஜெயலலிதாவுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு? * ஸ்டாலின் விளக்கம்
ஜெயலலிதாவுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு? * ஸ்டாலின் விளக்கம்
UPDATED : மே 11, 2010 10:46 AM
ADDED : மே 11, 2010 12:30 AM

சென்னை : ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலின் விளக்கினார்.காவல், தீயணைப்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்:சேகர்பாபு பேசும் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போதாது என்றும், அவருக்கு ஏதாவது ஏற்பட்டால் அரசு தான் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவுக்கு, "இசட் பிளஸ்' பிரிவில் தேசிய பாதுகாப்புப் படையின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில், மெய்க்காவலர்களாக இரண்டு எஸ்.பி.,க்கள், மூன்று இன்ஸ்பெக்டர்கள் தற்போது உள்ளனர். இவர்களிடம் 9 எம்.எம்., பிஸ்டல் உள்ளது. கூடுதல் மெய்க்காப்பாளர்களாக மூன்று தலைமைக் காவலர்கள் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் உள்ளனர். இதுதவிர, வீட்டு பாதுகாவலர்களாக 10 பேர் எஸ்.எல்.ஆர்., துப்பாக்கிகளுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவர் செல்லும் வழி பாதுகாப்புக்கு, "எஸ்கார்ட்' ஆக பொலிரோ மற்றும் அம்பாசிடர் கார்கள் வழங்கப்பட்டு, அதில் 24 போலீசார் மூன்று ஷிப்ட்களில் பணியாற்றுகின்றனர். இதுதவிர, 12 தேசிய பாதுகாப்பு படையினர் இரண்டு அம்பாசிடர்களில், "எம்.பி.5' துப்பாக்கி ரகங்களுடன் வழி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.வீட்டுக்கு வரும் பார்வையாளர்களை பரிசோதனை செய்ய பகலில் இரண்டு பெண் போலீசாரும், இரவில் இரண்டு ஆண் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு, பரிசோதனை கருவிகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் காலை வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை மூன்று போலீசார் கண்காணிக்கின்றனர்.ஜெயலலிதாவுக்கு குண்டு துளைக்காத கார், டிரைவருடன் வழங்கப்பட்டுள்ளது. அவர், சிறுதாவூர் அல்லது கொடநாட்டில் தங்கும் போது, போயஸ் கார்டனில் 10 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.சமீபத்தில் விழுப்புரம், நெய்வேலி பகுதிகளுக்கு ஜெயலலிதா சென்ற போது, ஒவ்வொரு இடத்திலும் ஆயிரம் போலீசாருக்கு குறையாமல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.தற்போதுள்ள டி.ஜி.பி., விடுமுறை காலியிடத்தில் நியமிக்கப்பட்டவரா, நிரந்தர பணியில் நியமிக்கப்பட்டவரா என சேகர்பாபு கேட்டுள்ளார்.தற்போதைய டி.ஜி.பி., நிரந்தர பணியிடத்தில் தான் நியமிக்கப்பட்டார். டி.ஜி.பி.,யாக இருந்த ஜெயின், கடந்த பிப்ரவரியில் சொந்த காரணங்களுக்காக மூன்று மாதம் விடுமுறை கேட்டார். டி.ஜி.பி., பணியிடத்தை காலியாக வைக்க இயலாது என்பதால், அந்த இடத்தில் நியமிக்க, டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள நான்கு அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் இருந்து ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதை எதிர்த்து கூட இன்னொரு அதிகாரி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு சென்றார். நியமனம் சரி தான் என்று தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.கடந்த அரசு ஒருவரை டி.ஜி.பி.,யாக நியமித்து, அவரை சஸ்பெண்ட் செய்தது. ஐந்து ஆண்டுகளில் ஐந்து டி.ஜி.பி.,க்களை நியமித்தது. இந்த அரசு, பணியில் இருந்து ஓய்வுபெற்றாலோ, விடுமுறையில் சென்றாலோ தான் வேறு டி.ஜி.பி.,யை நியமிக்கிறது.நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு காரணமாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி. அவர், தற்போது முதல் முறையாக பெண் அதிகாரியான லத்திகா சரணை, டி.ஜி.பி.,யாக நியமித்துள்ளார்.இதுதவிர, உள்துறைச் செயலராக மாலதி என்ற திறமையான பெண் அதிகாரியை நியமித்துள்ளார். தமிழகத்திலேயே முதல் முறையாக, 1999ல் பெண் அதிகாரி சாந்தா ஷீலா நாயரை உள்துறைச் செயலராக நியமித்தவர் கருணாநிதி தான்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
