ADDED : மே 11, 2010 12:29 AM

கோவை :மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் பெற வேண்டிய கட்டணம் பற்றிய அரசின் அறிவிப்பு, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் நேற்று நேரடியாக வழங்கப்பட்டது.
பள்ளி நிர்வாகிகள், அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக, பெற்றோர் புகார் செய்ததை தொடர்ந்து அரசே கட்டணம் நிர்ணயித்து வெளியிட்டுள்ளது. எல்.கே.ஜி.,க்கு குறைந்தபட்சம் 1,200 ரூபாயும் பிளஸ் 2 வகுப்புக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் பெறப்படும் கட்டணம், பள்ளிகளின் வசதிகள், ஆசிரியர் சம்பளம் , இதர செலவீனங்களின் அடிப்படையில், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பள்ளிக்கும் வெவ்வேறு கட்டண விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டண விபர கடிதங்கள் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. பெரும்பாலான பள்ளி நிர்வாகிகள் தாங்கள் சார்ந்துள்ள சங்கங்களுடன் இணைந்து மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தனர்.
பள்ளி தாளாளர் ஒருவர் கூறியதாவது: இன்று அனைத்தும் உலகமயம் ஆகி விட்டதால், கல்வியும் அது சார்ந்த போட்டியும் உலகமயமாகி விட்டது. இதனால் மாணவர்களுக்கு உலக தரத்தினாலான கல்வி அளிப்பது முக்கியம். ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் அளிப்பது, பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலமே தரமான கல்வி வழங்குவது சாத்தியம்.சமீப காலமாக பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் ஆரோக்கியமான போட்டியை சமாளிக்க, பள்ளியின் வசதிகளை மேம்படுத்த வேண்டியதுள்ளது. இந்த ஆரோக்கியமான போட்டியால் மாணவர்கள் சிறந்த பலன் பெறுவர். பி.எட்., படித்த ஆசிரியருக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் சம்பளமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 8,000 ரூபாயும் அளிக்க வேண்டியதுள்ளது. இதை தவிர, ஏராளமான பிற செலவுகள் உள்ளன.அரசின் அறிவிப்பு காரணமாக கூடுதல் ஆசிரியர்களை பணியமர்த்த முடியாது. வகுப்புக்கு மூன்று ஆசிரியர் என்ற நிலை இனி வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என மாறும். அதிக வேலைப்பளுவால் தரமான கல்வி வழங்குவது தடைபடும். இறுதியில் மாணவர்களுக்குதான் பாதிப்பு ஏற்படும். உலகளாவிய போட்டியை சந்திக்க நம் மாணவர்கள் லாயக்கில்லாதவர்களாகி விடுவர். ஐ.ஐ.டி., ஐ.ஏ.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளை சந்திக்கும் திறன் இருக்காது. இதன் பாதிப்பு 7,8 ஆண்டுகளுக்கு பின்னரே தெரியும். அரசு எடுத்துள்ள இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.
கோவை தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமசாமி கூறியது: எதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் விதம் விதமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என விளக்கவில்லை. ஓட்டுக் கூரையுள்ள பள்ளியை விட, ஆஸ்பெஸ்டாஸ் கூரையுள்ள பள்ளிக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு சிறப்பு தேர்வுகள், பயிற்சிகளுக்கு மட்டுமே ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு பள்ளிக்கு 30,000 ரூபாய் செலவாகிறது. சாதாரண கட்டடத் தொழிலாளிக்கு கூட தனது பணிக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பள்ளிகள் நடத்தும் நிர்வாகிகளுக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது எந்தவகையிலும் நியாயமில்லை. புதிய கட்டணத்தை பயன்படுத்தி பள்ளியை நடத்தவே முடியாது. நாங்கள் ஏற்கப் போவதில்லை. கட்டாயப்படுத்தினால் பள்ளிகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தி தவிக்கும் நிலை உருவாகும், என்றார்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில், ""அரசின் உதவி இல்லாமல் ஏராளமான ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பும், குழந்தைகளுக்கு தரமான கல்வியும் அளித்து வரும் தனியார் பள்ளிகளை, அரசு முடக்க நினைப்பது நடக்காது. பொருளாதார வசதியில்லாத பள்ளிகளில் அதிக சம்பளம் அளித்து ஆசிரியரை நியமிக்க முடியாது. பெரிய பள்ளிகளில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவுகளை, குறைந்த கட்டணத்தால் சமாளிக்க முடியாது. விரைவில் சங்கத்தின் கூட்டத்தை கூட்டி, மேல் முறையீடு செய்வதற்கான நடவடிக்கையில் இறங்குவோம்,'' என்றார்.
சாக்பீசுக்கு ரூ.50,000 செலவு: ""தரமான தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு மாணவர் தினமும் அரை லிட்டர் குடித்தாலும், குறைந்தபட்ச எண்ணிக்கை கொண்ட ஒரு வகுப்புக்கு மாதம் 30,000 ரூபாய் செலவாகிறது. சாக்பீசுக்கு மட்டும் ஆண்டுக்கு 50,000 ரூபாய் செலவாகிறது. கட்டணம் நிர்ணயித்த அரசு, இது போன்ற மறைமுக கட்டணங்களை உட்படுத்த தவறி விட்டது,'' என குமுறித் தள்ளினர் தனியார் பள்ளி நிர்வாகிகள்.
"அதிக கட்டணம் பெறக் கூடாது' கடிதம் மூலம் அரசு எச்சரிக்கை : தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் நேற்று அரசு வழங்கிய கடிதத்தில், "உங்கள் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய கட்டணத்தைத் தவிர, வேறு எந்த தலைப்புகளிலும் கூடுதல் கட்டணம் பெறக் கூடாது. அடுத்த மூன்று ஆண்டுகள் அல்லது தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியின் அடுத்த உத்தரவு வரும் வரை இதே கட்டணம்தான் பெற வேண்டும். பல்வேறு தலைப்புகளின் கீழ் நீங்கள் பள்ளியில் பெறும் கட்டணங்களின் அடிப்படையில்தான் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தலைப்புகளில் இனி நீங்கள் கட்டணம் வசூலிக்கலாம். ஆனால் மொத்த கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது. ஹாஸ்டல், போக்குவரத்துக்கான கட்டணம் இதில் உட்படுத்தப்படவில்லை,' என கூறப்பட்டுள்ளது.
